வற்றாத கடலும் வராத மீனும்

tamil christian message, tamil christian book

கடற்கரையில் ஒரு நாய் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது கடல் அலைகளின் வேகத்தில் ஒரு மீன் துள்ளிக் குதித்துக் கரையில் வந்து விழுந்தது. நாய் வேகமாக ஓடிப்போய் அந்த மீனைக் கடித்துத் தின்றது. அந்த நாய் அது வரை இவ்வளவு புதிய கடல்மீனை சாப்பிட்டதே இல்லை. மீனின் சுவையை நாயால் மறக்க முடியவில்லை. வேறு மீன்கள் கரையில் வந்து விழும் என்ற நம்பிக்கையில் நெடுநேரம் கடற்கரையிலேயே அமர்ந்திருந்தது. ஒரு மீனும் விழவில்லை. இருட்டிப் போனது. அப்போதும் அதற்குப் போகவே மனதில்லை. பிறகு பசியெடுக்கவே அரை மனதுடன் அங்கிருந்து சென்றது. இருந்தாலும் அதன் மனமெல்லாம் கடலிலேயே இருந்தது. மறுநாள் அது மீண்டும் கடலை நோக்கிக் கிளம்பி விட்டது. அன்று முழுவதும் கூட ஒரு மீன் கூடக் கரையில் விழவே இல்லை. வருத்தத்துடன் திரும்பிப் போய்க் கொண்டிருக்கும் போது அதன் கண்களில் ஒரு காட்சி பட்டது. வழியில் இருந்த ஒரு சிறிய குட்டை வெயிலில் காய்ந்துபோய்க் கிடந்தது. அதில் இருந்த பிடிக்கப் படாத மீன்கள், நத்தைகள் எல்லாம் செத்துக் கிடந்தன. காகங்களும் , கழுகுகளும் கூட்டமாய் அவற்றைத் தின்று கொண்டு இருந்தன.

நாய் நெருங்கிப் போய்ப் பார்ப்பதற்குள் எல்லாவற்றையும் தின்று முடித்து விட்டன. இங்கும் ஏமாற்றம். நாய் மிகுந்த வருத்தத்துடன் திரும்பும் போது அதன் மனதில் ஒரு யோசனை பளிச்சிட்டது. "இந்தக் குட்டை வற்றிப் போனது போலவே, கடலும் ஒரு நாள் வற்றிப் போய் விடாதா? அப்போது நான் அங்கே இருந்தால் எவ்வளவு மீன் கிடைக்கும்!" அந்த எண்ணமே அதற்கு இனிப்பாக இருந்தது. காலையில் எழுந்தவுடனேயே கடற்கரையில் போய் உட்கார்ந்து விட்டது. வெயில் ஏற ஏற நாய்க்கு உற்சாகம் அதிகமானது. சுற்றிலும் பார்த்தது. பக்கத்தில் எங்குமே காகமோ , கழுகோ காணப்படவில்லை.

"இன்னிக்கு நல்ல வேட்டைதான். சீக்கிரமா கடல் வத்திப் போகணுமே. எந்தப் போட்டியும் இல்லாமல் வயிறு நிறைய மீன் சாப்பிட்டலாமே என்று நினைத்து. வெயில் மண்டையைப் பிளந்தது. ஆனாலும் கடல் நீர் காய்ந்து போகவில்லை. நாட்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. இது வரை கடல் வற்றிப் போகவே இல்லை. இன்னும் நாய் கடல் வற்றிப் போய் மீன்களை எல்லாம் சாப்பிட்டு விடலாம் என்று காத்துக்கொண்டே இருக்கிறது. செல்லமே! இந்த நாய் போலத்தான் பிசாசு நம்முடைய விசுவாசம் என்ற கடல் வற்றிப் போகவும், நம்மை எளிதாகப் பட்சிக்கவும் நெடுநாட்களாக நம்மையே உற்றுப் பார்த்தபடியே உட்கார்ந்திருக்கிறான். ஆனால் கடல் வற்றப் போவதுமில்லை, அவனது கேவலமான ஆசை நிறைவேறப் போவதுமில்லை. உனது விசுவாசம் வற்றாத சமுத்திரந்தான் அல்லவா ?

"விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள். உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. 1பேதுரு 5 : 9

tamil christian article, tamil daily devotion, tamil christian devotion, tamil message, www.christsquare.com, tamil christian stories