வேதனைக்கு இடமேது ?

tamil christian message, tamil christian book

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஜெபித்து விட்டு செய்வதும், ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.

அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது . "திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை " என்று அடிக்கடி சொல்லும் . அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.

விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் பட வில்லையென்றபோதிலும், கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. "பெரிய ஆபத்திலேர்ந்து என்னைக் காப்பாத்திட்டீங்க கடவுளே. உங்களுக்கு நன்றி " என்றது . இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது.

"கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன் " என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது , "கடவுளை நம்புற நாங்கள்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. (2 கொரிந்தியர் 4/9) . அதனால கடவுள் எங்கள கீழே தள்ளிவிட்டாலும் அதுலயும் காரணம் இருக்கும் " என்றது.

"ஆமாமாம் . கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை " மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது , கண்களை மூடி விண்ணை நோக்கி, "கடவுளே , இந்த அவமானத்துக்கும், வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுங்க" என்றது.

அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. "டேய் , உன் பக்கத்துல பாம்புடா " என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது . தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது .

சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம் . அது நம்முடைய ஜீவனை மீட்பதற்காகக் கூட இருக்கலாம் . நமக்கு எது நிகழ்ந்தாலும் கர்த்தர் அதை நன்மைக்கு ஏதுவாகவே அனுமதித்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடமேது ?

"அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார் " புலம்பல் 3 :32

Tamil christian article, tamil daily devotion, tamil christian devotion, tamil message, www.christsquare.com, tamil christian stories