ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று உலகப் பழமொழி ஒன்று உண்டு, அதன் அர்த்தம் ஒற்றுமையாய் இருந்தால் இந்த உலகத்தில் வாழ நிச்சயமாய் வழி உண்டு என்பதாகும், மக்களிடம் ஒற்றுமை மட்டும் இருந்தால் போதும் இந்த உலகத்தில் அவர்களை எதிர்க்கும் காரியங்களிலிருந்து வெற்றி பெற முடியும், இப்படி அனேக தத்துவங்கள் ஒற்றுமையை குறித்து நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒற்றுமையை குறித்து சபைகளில் பலமுறை பிரசங்கங்களில் ஊழியர்கள் பேசியிருப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் ஒற்றுமை என்பது கிறிஸ்தவ விசுவாசிகளிடம் உள்ளதா? அவர்களுக்கு போதிக்கும் ஊழியர்களிடம் உள்ளதா? என்பது பெரிய கேள்விக்குறியாக தான் உள்ளது.
கிறிஸ்தவர்களை முன் எடுத்து நடத்திய ஊழியர்களின் ஒற்றுமையினால் உலகில் பல எழுப்புதல்கள் நடந்துள்ளது என்பது உலக வரலாற்றில் புதைந்திருக்கிறது, ஒற்றுமையினால் பல மாற்றங்களை கிறிஸ்துவ மக்கள் பெற்றிருக்கிறார்கள்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்! இன்று தமிழ்நாட்டில் ஒரு சில ஊழியர்கள் முட்டிக் கொள்வதை பார்த்து கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் கேலி, கிண்டல் செய்து வருகிறார்கள், ஏன் கிறிஸ்துவை அறிந்தவர்களே இவர்கள் போடும் சண்டையை யூடியூபில் பார்த்து மனவேதனையில் உள்ளனர், இப்படி முட்டல் மோதல் இருந்தால் இவர்கள் சொல்லும் சுவிசேஷம் எப்படி இரட்சிக்கப்படாத மக்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் உண்டு பண்ணும்?, அறுப்பு மிகுதி ஆட்கள் குறைவு என்று இயேசு சொன்னார், ஆனால் ஒரு சில ஊழியர்களால் இருக்கின்ற கொஞ்ச பயிர்களையும் அழித்து விடுவார்கள் போல தெரிகிறது.
சில சபைகளில் இயேசுவைப் பற்றிப் பேசவும் அவரது சத்தியத்தை எடுத்துரைக்கவும் பிரசங்க பீடங்களை பயன்படுத்துவதில்லை மாறாக மற்ற போதகர்களை தாக்கிப் பேச பயன்படுத்தப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை, இது போதாக்குறைக்கு பேஸ்புக், யூடுப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெருமை தேடி கொள்கிறார்கள், அடுத்த ஞாயிறு கிழமையே விமர்சனத்திற்கு உள்ளான போதகரும் பதில் கொடுத்து இணையத்தில் பரவ விடுகிறார், ஒரு ஊழியர் தவறு செய்தால் அவரை தனிமையில் அழைத்துப் பேசலாம் அல்லது தொலைபேசியில் கூட பேசி அறிவுறை கூறலாம், அதை விட்டுவிட்டு இப்படி செய்தால், தேவனுடைய நாமத்தை வீணாய் வழங்குவது போலாகும்.
கிறிஸ்துவ மக்களை பரலோக ராஜ்ஜியத்திற்கும், ஆண்டவரின் இரண்டாம் வருகைக்கும் ஆயத்தப்படுத்துவதே எல்லா ஊழியர்களுக்கும் தலையாய கடமையாக இருக்க வேண்டும், அரசியல்வதி பொது மேடையில் பேசுவது போல் எல்லாவற்றிற்கும் எதிர்வாதம் பேசிக்கொண்டும் கண்டனம் தெரிவிப்பதற்கும் , மற்ற ஊழியர்களை குறை சொல்வதற்கும் பிரசங்க பீடத்தை பயன்படுத்தக்கூடாது.
கிறிஸ்துவ ஊழியர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் இயேசுவைப் பற்றி எப்படி சுவிசேஷம் சொல்லமுடியும்? போதகர் எப்படி இருக்கிறாரோ விசுவாசியும் அப்படித்தான் இருப்பார்கள், “அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே”, ஆண்டவருக்கு இது அருவருப்பான ஒன்று, தவறு செய்வது இயல்பு. உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி, தவறு செய்யும் ஊழியர்களுக்காக ஜெபம் செய், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கூடி ஜெபித்தால் கோடி ஆசீர்வாதம் மற்றும் அதிக அறுவடை, ஒன்றுபடுவோம் ஒருவரையொருவர் கணம் பண்ணுவோம், கிறிஸ்து நம்மை நேசிப்பது போல, தவறு செய்தவர்களையும் நேசிப்போம், கர்த்தர் அவர் சித்தம் போல் அனைவரையும் மாற்றுவார்.
சகோ.திலிப் Daniel