அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக் கொண்டு
மரிக்கிறார் மா நிந்தையாய்
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்
சமஸ்தமும் மா வடிவாய்
சிஷ்டித்து ஆண்டுவந்த
எக்காலமும் விடாமையாய்
விண்ணோரால் துதிபெற்ற
மா தெய்வ மைந்தன் இவரோ
இவ்வண்ணம் துன்பப் பட்டாரோ
பிதாவின் திவ்விய மைந்தன்
அநாதி ஜோதி நரனாய்
பூலோகத்தில் ஜென்மித்து
அரூபி ரூபி தயவாய்
என் கோலத்தை எடுத்து
மெய்யான பலியாய் மாண்டார்
நிறைந்த மீட்புண்டாக்கினார்
என் ரட்சகர் என் நாதர்