நம்மெல்லாருடைய வீட்டிலும் கண்டிப்பாக கதவு இருக்கும். பலவிதமான கதவுகள், சிலர் அழகுக்காக காசு செலவழித்து அமைப்பது வழக்கம். அந்த கதவின் முழுமையான நோக்கம் என்னவென்றால், வீட்டைப் பாதுகாக்க. தெரியாத யாரும் வீட்டிற்குள் நுழைந்துவிடக்கூடாது, மேலும் நாய் பூனை எலி என ஏதும் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக கதவுகளை நம் வீட்டிற்கு அமைத்துக்கொள்கிறோம்.
திடீரென்று யாரோ ஒருவர் வெளியேயிருந்து நம்மை அழைக்க, ஓடிவந்து பார்ப்போம். நமக்கேதெரியும் அவர்களுக்கு கதவை திறக்காமலே பதில்சொல்லி அனுப்பிடலாமா அல்லது கதவைத்திறந்து உள்ளே அழைத்து விஷயத்தை கேட்கணுமா அல்லது கதவை திறந்து உள்ளே அழைத்து சாப்பிட வைத்து பேசி அனுப்பனுமா என்று. இந்த மூன்று விஷயமும் வந்திருக்கிற நபரைப்பொறுத்து அமையும்.
ஒரு சாதாரண வீட்டிற்கு ஒருவர் வரும்போது கதவை திறப்பதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்கிறோமோ, அதைவிட நம் இருதயமாகிய கதவை யாருக்கு திறக்கிறோம் என்பதில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். வீட்டிற்குள்ளிருந்து கதவை திறப்பது திறக்காமலிருப்பது நமது உரிமை. உலகில் பல மனிதர்கள் உள்ளனர். வேதம் சொல்கிறது, “பிற்காலங்களிலே மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்”, மேலும்”சீர்கேடான வீண்பேச்சுகள் பேசுகிறவர்களுக்கு விலகியிருங்கள்” என்றும். நம்மை விசுவாசத்தில் இடறிபோகப்பண்ணுகிறவர்களுக்கு உங்கள் இருதயமாகிய கதவுகளை திறந்து உள்ளே அழைத்துக்கொள்ளாதிருங்கள். அவர்கள் நம்மை நம் வாழ்க்கையில் இடறிபோகப்பண்ணுவார்கள். ஆண்டவரிடம் ‘மனிதர்களை’ பகுத்தறியும் வரத்தைக்கேட்டு பெற்றுக்கொண்டு, அதை வாழ்க்கையில் கைக்கொண்டு விசுவாசத்திலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும், உலகப்பிரகாரமான ஆசீர்வாதத்திலும் உயர்ந்திருப்போம்.