ஒரு சலவைத் தொழிலாளியிடம் ஒரு கழுதை இருந்தது. வறுமையின் காரணமாக அவரால் சரியான தீவனம் போடயியலாததால் கழுதை மெலிவாக காணப்பட்டது. அதைக்கண்டு வருத்தப்பட்ட தொழிலாளி, வழியில் ஒரு புலி செத்துக்கிடக்கிறதை பார்த்து, அந்த தோலை கொண்டுவந்து கழுதையின்மேல் போர்த்து, விவசாய நிலத்தின் மீது மேயவிட்டான். விவசாயிகளும் உண்மையான புலிதான் என்று நினைத்து பயத்தில் அதை விரட்டிவிடவில்லை. சில வாரங்கள் புலித்தோல் போர்த்த அந்த கழுதை சுதந்திரமாக வயல்நிலங்களில் மேய்ந்து கொழுக்க ஆரம்பித்துவிட்டது.
அப்படியாக ஒரு நாள் மேய்ந்துகொண்டிருக்கையில் அந்த பக்கமாக ஒரு பெண் கழுதைவர, அக்கழுதை கனைத்தவுடன் இந்த சலவை தொழிலாளியின் கழுதை சத்தமாக கனைத்துவிட்டது. அவ்வளவு நேரமாய் புலி என்று பயந்து ஓரமாக நின்றுகொண்டிருந்த விவசாயிகள், இது புலி அல்ல கழுதை என்று தெரிந்தவுடன் கம்பை எடுத்துக்கொண்டு வந்து அதை அடித்தே கொன்றுபோட்டனர். பிறவி குணம் பேய்க்கு குடுத்தாலும் தீராது என்ற பழமொழிக்கேற்ப தன்னுடைய சுயரூபம் நிச்சயம் ஒரு நாள் வெளிப்படும்.
“மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவறுப்பானவன்” என்று வேதத்தில் பார்க்கின்றோம். சிலபல காரியங்களுக்காக வெவ்வேறுவிதமாக மாற்றி நடிக்கும் பொழுது நாம் மற்றவர்களுக்கும், தேவனுக்கும் அருவறுப்பானவர்களாய் காணப்படுகின்றோம். உள்ளதை உள்ளதுபோல் நாம் நடக்கும்போது தேவனின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு!