ஒரு இளவயது வாலிபனாக இருந்த ஹென்றி கிரௌல் (Hendry Crowell), சுவிசேஷகரான டி எல் மூடி(D.L. Moody) இன் பிரசங்கத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார். சம்பாரிக்கவேண்டும் என்ற துடிப்புடன் இருந்த அந்த வாலிபன், ஆண்டவரிடம் ஜெபித்தார், ” ஆண்டவரே பணம் சம்பாதிக்க உதவிசெய்தீரானால் அதை உம்முடைய ஊழியத்திற்கென்று செலவு செய்வேன். என் பெயர் அல்ல உம்முடைய பெயர் மட்டும் மகிமைப்படட்டும் என்று”. அதே போல குவாக்கர் ஓட்ஸ் தயாரித்து விற்பதை தன் தொழிலாய் ஆரம்பித்தார் ஹென்றி. ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு முறையும் ஆண்டவரின் வழிநடத்துதல் வேண்டி ஜெபிப்பார். வரும் சிறு சிறு வருமானத்திலிருந்து தசமபாகம் செலுத்துவதில் தவறவில்லை அந்த வாலிபன். தனக்கு வரும் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை சரியான நேரத்தில் உண்மையாய் செலுத்தி வந்தார். ஆண்டவரும் மேலும் மேலும் அவரை ஆசிர்வதிக்க ஒரு நாள் அந்த வாலிபன் கவனித்தார், தனக்கு வரும் வருமானத்தில் தான் செய்ய வேண்டிய எல்லாவற்றை செய்து முடித்தும், இன்னும் அதிகமான பணம் கையில் இருக்கிறது என்று. அந்த நாளில் இருந்து தொழிலில் வரும் லாபத்தில் எழுபது சதவீதம் ஆண்டவருக்காக கொடுக்க ஆரம்பித்தார். உலகத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக வந்தார். அப்படியாக தொழிலில் ஜெயித்தும் ஆண்டவருக்கு கொடுப்பதை நிறுத்தாமல் நாற்பது ஆண்டுகள் அவ்வாறாக எழுபது சதவீதம் லாபத்தைக் கொடுப்பதை தொடர்ந்து செய்து வந்தார்.
தனது வாழ்க்கையின் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாய் இருந்த மூடி மறைந்துவிட்டநிலையில், அவர் உருவாக்கின வேதாகமக் கல்லூரி திணறிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்ட ஹென்றி, அதை பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டு அக்கல்லூரியை நடத்த ஆரம்பித்தார். அந்த கல்லூரியும் பெரிய அளவிற்கு எட்டினது. பெரிய பெரியக் காரியங்களை ஆண்டவருக்காக அந்த கல்லூரியின் மூலமாய் செய்தார் ஹென்றி.
எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், தான் ஆண்டருக்கு செய்த அந்த ஜெபத்தில் உண்மையாய் இருந்ததினால் கடைசிவரை ஹென்றியின் பெயர் அல்லாமல் ஆண்டவருடைய நாமம் மட்டும் மகிமைப்பட்டது. அதனால் தான் இன்று நம்மில் அநேகர் அவரை அறியாமல் இருக்கிறோம். இந்த நாட்களில் தொழில் செய்வோர்களுக்கும் ஊழியம் செய்வோர்களுக்கும் ஒரு பெரிய சாட்சியாக ஹென்றி காணப்படுகிறார். சிறு தொழில் குறைந்த வருமானம் என சோர்ந்து போகாமல் கிடைக்கின்ற வருமானத்தில் ஆண்டவருக்கு உண்மையாய் இருந்து, அந்த ஹென்றி அவர்களை போல ஆண்டவருக்கு அதாவது ஊழியங்களுக்கு கொடுத்து அந்த ஆசிர்வாதத்தை உங்கள் வாழிக்கையில் ருசிபார்க்க ஆசைப்படுகிறோம் வாழ்த்துகிறோம்.