பிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமான ஒன்று. அடிக்கடி குழந்தைக்கு பசி ஏற்பட்டு பால் குடிப்பதால் குழந்தை எவ்வளவு பால் உட்கொள்ளுகிறது என்று நமக்கு தெரிகிறதில்லை. நான் சொல்லப்போகின்ற காரியம் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை, ஆனால் ஒரு பிறந்தக்குழந்தை முதல் இரண்டு மாதங்களுக்கு வெறும் இரண்டு தேக்கரண்டி பால் மட்டுமே மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை குடிக்கும். அடுத்த சிலமாதங்களுக்கு அரை கப் அளவு பால் குடிக்கும் ஒவ்வொரு ஐந்து மணிநேரத்திற்க்கு. இவ்வாறு ஒவ்வொரு வளர்ச்சிக்கேற்ப குழந்தை பால் குடிக்கும் அளவை உயர்த்திக்கொண்டே இருக்கும்.
ஒரு எட்டுமாதங்கள் ஆனப்பின்பு குழந்தைக்கு உணவு கொடுக்க ஆரம்பிப்பார்கள். அப்படியாக குழந்தை வளர ஆரம்பிக்கும். இப்படியாக உணவு முறையின் அளவை கூட்டி கூட்டி குழந்தையின் வளர்ச்சிக்கு உதவி செய்வோம். ஆனால் குழந்தை பிறந்த நாளில் இருந்து அதே அளவு பாலை பலவருடங்களாக குடித்தால், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். நம் குழந்தையை வளர்ச்சியில்லாத குழந்தையாக வைத்திருக்க நாம் விரும்புவதில்லை. ஒவ்வொரு தாயும் தன் குழந்தை அதினதின் பருவத்தில் அந்தந்த வளர்ச்சியை எதிர்பார்த்து, அதற்காக பலவற்றை வாங்கிக்கொடுக்கின்றார்கள். அந்த குழந்தையின் வளர்ச்சி பெற்றோர்களாகிய (பெரியோர்களாகிய) நம் கையில் உள்ளது.
வேதம் சொல்லுகிறது, “நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒறுமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்…” என்று. நாம் தேவன்மேல் விசுவாசத்திலும், தேவனைப்பற்றி அறியும் அறிவிலும் வளர்ந்து பூரண புருஷராயிருக்கவேண்டும். வாக்குத்தத்ததை மட்டும் சொல்லிக்கொண்டே இருக்காமல், அந்த வாக்குத்தத்தத்தையடைய நாம் என்ன செய்யவேண்டும் என்று, பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையாய் அல்லாமல் அடுத்து கறி மீன் கொண்ட ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிடும்போதுதான், குழந்தை மட்டுமல்ல, நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சியோடு பெரிய பெரிய காரியங்களை அனுபவிக்கலாம்.