ஒரு சிறுவன் தன் தாயுடன் பேருந்தில் பயணம் செய்கையில் தூக்க கலக்கத்தில் தூங்கி கீழே விழுந்துகொண்டே இருந்தான். அவனால் நிம்மதியாக தூங்க இயலவில்லை ஏன்னா கீழே விழுந்துருவேன்னு ஒரு பயம் அவனுக்குள். அப்போ அருகில் இருந்த தன் அம்மாவிடம் தூக்கம் வருதுன்னு சொல்லி அவங்க மடியில் சாய்கிறான். இப்போ நிம்மதியா பயமில்லாமல் தூங்குறான். அவனை அந்த பயணத்தின் பாதையில் தூங்கவிடாதபடிக்கு ஏராளமான பள்ளங்கள், வேகத்தடைகள் என்று இருந்தும், அவன் எதையும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்குறான். காரணம் என்னனு கேக்குறீங்களா? ஏன்னா அவன் படுத்து தூங்குவது அவன் அம்மாவோட மடியில். பாதை எப்படிபட்டதாக இருந்தாலும் அம்மா தன்னை இறுக்கமாக புடிச்சு பாதுகாத்துக்குவாங்க என்கின்ற நம்பிக்கையில் தூங்குகிறான்.
அதே போல தான் வாழ்க்கையின் பாதையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்றங்கள் இறக்கங்கள் என எப்படி இருந்தாலும், ஒரு தாயின் மடியில் தூங்கும் ஒரு பிள்ளையாய் நாம் நம் இயேசுவின் கையில் இருக்கும் போது எதை குறித்தும் பயப்படாமல் நிம்மதியாக தூங்குவோம். இதை தான் பெர்க்மான்ஸ் ஐயா அனுபவித்தார்கள் போல் பாடல் எழுதி பாடியுள்ளார் “நீர் என்னை தங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்” என்று.
இந்த நாட்களில் பலர் தங்கள் சூழ்நிலைகளை எண்ணி தூங்கமுடியாமல் தவிக்கின்றனர். அதுவே அவர்கள் சரீரத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளில் முடிந்து போகும் பிரச்னையை எண்ணி எண்ணி தூங்காமல் வருத்தப்பட்டு பெரிய வியாதிகளை வாங்கிக்கொள்ளுகிறார்கள். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு நபராக இருந்தால் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுகிறோம், வேதத்தில் சங்கீதம் 4இல் “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன், கர்த்தாவே நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்கப்பண்ணுகிறீர்” என்று எழுதியிருக்கிறது. ஆகவே நாம் இயேசுவோடு கூட இருக்கும் போது அவர் நமக்கு சமாதானமான நிம்மதியான நித்திரை கொடுக்கிறார். அதனால் நாமும் வியாதிகள் இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.