ஆபிரகாம் லிங்கன் மிக அருமையாக நேசித்து வாசித்த வேதம் இன்றும் பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறதாம். அதை கையில் எடுத்த உடனேயே 34ம் சங்கீதம் இருக்கும் பக்கம்தான் நமக்குத் தெரியவருமாம். ஆபிரகாம்லிங்கன் அந்த அதிகாரத்தை அடிக்கடி வாசிப்பாராம். விசேஷமாய் 4ம் வசனத்தை திரும்பத்திரும்ப படித்தபடியினால் அந்த வசனம் இருக்கும் இடம் தேய்ந்து அழுக்கடைந்து போயிருக்கிறது என்பர் அமெரிக்காவில் உள்நாட்டுக் குழப்பம் மிக அதிகமாக யுத்தம் மூண்ட வேளைகளில் எல்லாம் ஆபிரகாம் லிங்கன் இந்த வசனத்தைச் சொல்லிச் சொல்லி ஜெபிப்பாராம்.
திரும்பத் திரும்ப வாசிக்க அது இருதயமாகிய பலகையில் எழுதப்படும். இருதயத்தில் இருந்தால் தேவையான நேரம், ஏற்ற வசனம் சொல்லி காரியங்களை ஜெயமாய் மாற்றிக் கொள்ள முடியும். பிசாசை ஜெயிக்க சிறந்த போராயுதம் வசனம் தான். வசனம் தெரியாவிட்டால் என்னதான் செய்தாலும் காரியம் ஜெயமாகாது. சத்தியம் என்னும் கச்சையை அரையில் கட்ட வேண்டுமாம்.(எபே.6:14)
வேத வசனங்களை இருதயத்தில் வைத்து வைக்கும் அனுபவம் இதுவரை இல்லைஎன்றால் இனி அதை மாற்றிக் கொள்ளுங்களேன். “”நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்” ஓசியா 4:6 வேதத்தை மறப்போரின் பிள்ளைகள் தேவனால் மறக்கப்படுவார்களாம். எத்தனை அபாயகரமானது. கர்த்தர் நம்மை நினைத்து ஆசீர்வதிக்க வேண்டுமே. வேதத்தை மறவாதவரின் சந்ததியை அவர் மறப்பதில்லை. கர்த்தர் உங்கள் பிள்ளைகளை மறவாதிருக்க இனி வேதத்தை மறவேன் என தீர்மானிப்பீர்களா?