ஒரு சிறுவன் ஒரு சிறு கைப்பிரதி

ஓர் கிறிஸ்தவ வியாபாரி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், மாலையில் தான் பெற்ற பாவ மன்னிப்பை மற்றவர்களும் பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் பலருக்குக் கைப்பிரதிகள் கொடுத்து ஊழியம் செய்து வந்தார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுது மழை பெய்து கொண்டிருந்தது. வியாபாரியும் மிகவும் களைப்புடன் கைப்பிரதிகள் கொடுக்காமல் சும்மா உட்கார்ந்திருந்தார். அவரது பத்து வயது மகன் அவரிடம் வந்தான். அப்பா, நீங்கள் போகமுடியாவிடில் நான் கைப்பிரதிகளைக் கொண்டுபோய்க் கொடுக்கிறேன் என்றான். அவர் மகன் கையில் சில கைப்பிரதிகளை தந்து, நீ சமீபமாயுள்ள இடங்களில் தந்தால் போதும் என்று கூறி அனுப்பினார். மகனும் மழைக்கான பாதுகாப்பு உடைகளை அணிந்து கைப்பிரதிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். மழை பெய்து கொண்டேயிருந்தது. வீதியில் ஒரு சிலரே சென்று கொண்டிருந்தனர். சிறுவன் அங்கு மிங்கும் ஓடினான். தான் கண்ட யாவருக்கும் கைப்பிரதிகளைக் கொடுத்தான். இறுதியில் அவனிடம் ஒரே ஒரு கைப்பிரதி மீந்தது. அருகிலிருந்த வீட்டின் மூடியிருந்த கதவைத் தட்டினான். யாரும் வராததால் தட்டிக் கொண்டேயிருந்தான். அப்போது ஒரு மூதாட்டி கதவைத் திறந்து சிறுவனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்?’ என்று கடுமையான குரலில் கேட்டார்கள். சிறுவன் சற்றுப்பயத்துடன் “இதை வாங்கிப் படியுங்கள்’ என்று சொல்லி மூதாட்டியின் கையில் கடைசி கைப்பிரதியைத் தந்துவிட்டு ஓட்டமாய் ஓடிவீடு சேர்ந்தான்.

மறு ஞாயிறு அன்று கிறிஸ்துவ வியாபாரியும், அவர் மகனும் ஆலயத்திற்குச் சென்றனர். ஒரு மூதாட்டி மிகுந்த முகமலர்ச்சியுடன் சபையார் முன்னால்வந்து சாட்சி கூறினார்கள். “கடந்த ஞாயிறு மாலையில் யாவராலும் கைவிடப்பட்ட சோக உணர்வால் மனம் நொந்து உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்து உள் அறைக்குள் சென்றேன். யாரோ, வாசற்கதவைத் தட்டும் சத்தம் கேட்டுத் திரும்பி வந்து கதவைத் திறந்தேன். தேவதூதனைப் போன்று ஒரு சிறுவன் ஒரு சிறு கைப்பிரதியை என்னிடம் தந்துவிட்டு ஓடிவிட்டான். அதில் இயேசு உன்னை நேசிக்கிறார் என்று எழுதியிருந்தது. என்னையும் நேசிப்பவர் ஒருவர் உண்டா? என்ற சிந்தனையோடு அதனை முழுவதுமாய் வாசித்தேன். அந்தச் செய்தி என் நெஞ்சைத்தொட்டது. அதிலுள்ளபடி இயேசுவுக்கு என்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்து, நான் செய்ய நினைத்த தற்கொலை என்ற கொடிய பாவத்திலிருந்து தப்பினேன். இப்போது இயேசு எனக்கு மிகுந்த சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்திருக்கிறார்” என்று சாட்சி கூறினார்.

இதைக்கோட்ட சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அப்பா, என்னிடம் இருந்த கடைசி கைப்பிரதியைப் பெற்றுக்கொண்ட அம்மாள் இவர்கள் தான் என்றான். தகப்பனும், மகனும் மிகுந்த மகிழ்ச்சியோடு கடவுளைத் துதித்தார்கள்.

மனிதரிடம் காணப்படும் எல்லாவிதமான மனத்துயரங்களுக்கும் அடிப்படைக் காரணம் பாவந்தான். இவற்றை நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் அறிக்கையிடும்பொழுது அவை மன்னிக்கப்படுகிறது. ஆகவே இன்றே அவரிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டு அவர் அருளும் சமாதானத்தையும், பாவமன்னிப்பையும், மீட்பையும் பெற்றுக் கொள்வோம்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE