மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்த ஒரு மனிதனிடம் அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் அவர் சோர்வுடன் இருக்கும் காரணத்தை கேட்டார்…”தன் வயலுக்கு நீர் பாய்ச்ச கிணறு தோண்டியதாகவும் ஆனால் தண்ணீர் கிடைக்காததால் விரக்தியடைந்து இருப்பதாகவும்” சொன்னார்.
இதைக்கேட்ட அந்த பெரியவர் தோண்டிய இடத்தை காண்பிக்குமாறு கூறி அம்மனிதனுடன் சென்றார், தண்ணீருக்காக சுமார் 15 அடி தோண்டிய 12க்கும் மேற்பட்ட குழிகளை அங்கு கண்ட பெரியவர் அவனின் தோல்விக்கான காரணத்தை அறிந்தவராய் அம்மனிதனை அழைத்து “தம்பி நீ தண்ணீருக்காக 12க்கும் மேற்பட்ட இடத்தை தோண்டியிருக்கிறாய், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 15 அடி தோண்டியிருக்கிறாய், அதாவது நீ மொத்தம் 12 இடங்களில் தோண்டியது சுமார் 180 அடியிருக்கும் ஆனால் நீ 12 இடத்தில் தோண்டினத்தை ஒரே இடத்தில தோண்டியிருந்தால் நிச்சயமாக நல்ல தண்ணீர் உனக்கு கிடைத்திருக்கும்” என்று அறிவுரை வழங்கினார் .
இந்த அறிவுரையின்படி ஒரே இடத்தில தன் எல்லா உழைப்பையும் பயன்படுத்தி தோண்ட துவங்கினான் அம்மனிதன், சில நாட்களில் அம்மனிதனுக்கு நல்ல நீர் கிடைத்தது அதன்மூலம் அவன் செய்துவந்த விவசாயம் செழித்தது மட்டுமல்லாமல் சுற்றியிருத்த பல ஊர்களுக்கு அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கொடுக்கப்பட்டு அந்த கிராமங்களும் செழித்தது .
ஆம் நண்பர்களே! பல நேரங்களில் நம் உழைப்பை பல இடத்தில பல விஷயங்களுக்காக செலுத்தி வீணடித்துவிட்டு ஒரு பலனும் இல்லாமல் துக்கத்துடன் இருக்கலாம், ஆனால் இன்று முதல் நம் லட்சியத்திற்கு நேராக ஒரே சிந்தையுடன் செயல்படுவோம் வெற்றிகளை குவிப்போம்! அந்த வெற்றி உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சார்ந்தவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் செய்யும் எல்லா காரியங்களையும் கர்த்தர் வாய்க்க செய்வாராக.
“இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” யாக்கோபு 1:8
“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்” சங்கீதம் 51:10