ஒரு முறை ஒரு துறவியும் அவரது சீடனும் தூர இடத்திற்கு நடை பயணமாக சென்றனர். வழியில் ஆறு ஒன்று கரைபுரளும் வெள்ளத்தோடு அவர்களுக்குக் குறுக்கிட்டது. அதை அவர்கள் நீந்திக்கடக்க ஆயத்தமான போது, ஒரு வாலிபப்பெண் வேகமாக அவர்களிடம் வந்து, “ஐயா, தயவு செய்து என்னை அக்கரையில் கொண்டுபோய் விட்டு விடுங்கள், எனக்கு நீந்தத் தெரியாது நான் அவசரமாக அக்கரைக்குப் போக வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.”
துறவியோ கண்டிப்பாக மறுத்துவிட்டார். சீடனோ அவள் மேல் பரிதாபப்பட்டு ஆற்றைக் கடக்கும் போது அந்தப் பெண்ணையும் சுமந்து வந்து மறுகரையில் விட்டான். அவளும் பணிவோடு நன்றி சொல்லி கடந்து போனாள். அதன் பிறகு அந்தத் துறவியின் எண்ணம் முழுவதும் சீடனைப்பற்றியும், அந்தப் பெண்ணையும் பற்றியுமே இருந்தது. இறுதியில் அவர் தன் சீடனிடம், “நீ அந்தப் பெண்ணைச் சுமந்து” வந்த போது உன் மனது பாதிக்கப்படவில்லையா? “அந்த நினைவும் உன்னை விட்டு நீங்கி இருக்காதே,” என்றார். அதற்கு அந்தச் சீடன் தன் குருவிடம் “குருவே, நான் அந்தப் பெண்ணை அந்தச் ஆற்றங்கரையிலேயே இறக்கிவிட்டு விட்டேன். நீரோ அவளை இன்றும் சுமந்து கொண்டே வருகிறீரே,” என்றானாம்.
மனுஷருடைய இருதயத்துக்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவும், பொருளாசைகளும், மதிகேடும், பெருமையும் புறப்பட்டு வரும் என வேதம் கூறுகிறது.
“மனுஷனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” மாற். 7:10
பொல்லாத சிந்தனைகள் மனுஷனின் இருதயத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்று இயேசு கிறிஸ்துவே
சொல்லியிருக்கிறார். தீட்டுள்ளவன் பரலோக ராஜாயத்தில் பிரவேசிக்க முடியாது என்பதை அறிந்தோர் சிந்தித்து செயல்படுவர் என்பது நிச்சயம்.