ஒரு முறை ஒரு தம்பி கப்பல் பிரயாணத்தின்போது கப்பலின் அடித்தளத்தில் சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தான். கப்பலின் கேப்டன் அவனைப் பார்த்து, “ஏன் தம்பி, வாடி வதங்கி அமர்ந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அந்த வாலிபன் சொன்னான், “என்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கொண்டு கப்பலின் டிக்கெட்டை வாங்கினேன். ஆனால் பிரயாணத்தின்போது வாங்கி சாப்பிடுவதற்கு பணம் இல்லை. ஆகவே பிரயாண நாளிலிருந்து இதுவரையிலும் பட்டினியும் பசியுமாய் இருக்கிறேன்” என்றான்.
அந்த கப்பல் கேப்டன் அந்த வாலிபனிடம் இருந்த பயண டிக்கெட்டை வாங்கி அதன் பின்பாகத்தை திரும்பிக் காண்பித்தார். அதிலே பிரயாணம் செய்கிறவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு இலவசம் என்று எழுதியிருந்தது. தம்பி பிரயாண டிக்கெட்டிலே சாப்பாட்டுக்குறிய பணமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே நீ மூன்று வேளையும் கப்பலில் உள்ள உணவு விடுதிக்கு சென்று வயிறார சாப்பிடலாம்” என்று அன்போடு அனுப்பி வைத்தார்.
அதுபோலவே கர்த்தர் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை சுதந்திரியாத மக்களுக்காக ஏசாயா தீர்க்கதரிசி: “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப் போகிறார்கள்” என்று புலம்பினார் (ஏசா. 5:13). ஓசியா தீர்க்கதரிசி, “”என் ஜனம் அறியாமையினால் சங்காரமாகிறார்களே” என்று வேதனைப்பட்டார் (ஓசியா 4:6).