ஒரு பள்ளியில் ஆபிஸ் அட்டென்டர் ஒருவர் இருந்தார். யார் என்ன வாங்கச் சொன்னாலும் நல்ல தரமான பொருளை குறைந்த விலையில் வாங்கி வருவார். அது பற்றி அவரிடம் கேட்ட போது அவர் சொன்னது, காவல் நிலைய உயர் அதிகாரி வீட்டுக்கு வாங்க வந்திருக்கிறேன் என்று அதிகாரிப் பெயரைச் சொல்வாராம் . கடைக்காரர் மரியாதையோடு நல்ல பொருள்களை கொடுப்பாராம். நர்சரி பள்ளிக்கூட பிள்ளைகளிடம் தலைமை ஆசிரியர் பெயரை சொன்னால் உடனே கீழ்படிந்து பெற்றோர் சொல்வதைச் செய்யும், அது போன்று இயேசுகிறிஸ்துவின் பெயரை உச்சரித்தால் வனோர், பூதலத்தோர், பூமியின் கீழானோர் கூட பயப்படுவார்கள்.
நடுங்குவார்கள். இயேசு என்ற நாமம் நமக்கு பலத்த துருகம். அந்த நாமத்தின் மேன்மையை, வல்லமையை உணர்ந்தவர்கள் அந்த நாமக்கோட்டைக்குள் ஓடி மறைந்து சுகமாயிருப்பார்கள் என்று வேதம் சொல்லுகிறது. மாமிசம், உலகம், அந்தகார தீய சக்திகளிடமிருந்து நாம் தப்பித்துக்கொள்ள, அவைகளை மேற்கொள்ள தேவன் சில அரண்களை , கோட்டைகளை நமக்கு அடைக்கல பட்டணங்கள் போல் வைத்திருக்கிறார். அவையாவன நாமக்கோட்டை, வசனக்கோட்டை, இரத்தக்கோட்டை, ஆவியின் கோட்டை. மேற்சொன்ன அரண்களுக்கெல்லாம் ஆதாராமாக இருப்பது “இயேசு” என்ற நாமமே. அந்த நாமத்திற்கு வல்லமை கொடுப்பது அவர் சிலுவையில் சிந்திய இரத்தமே.
ஒவ்வொரு நாளும் இயேசு என்ற நாமத்தின் மகத்துவத்தை உணர்ந்து சகலஅதிகாரமுடைய அவரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது அந்தந்த நாளின் பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிப்பார்கள்.
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.மத்தேயு 28:18