கிறிஸ்தவர்கள் தாழ்மைக்கு இலக்கணம் வகிப்பவர்களாக இருக்க வேண்டும். பணிவு எல்லாருக்குமே ஆசீர்வாதமாக முடியும் என்பதில் சந்தேகமில்லை. உன்னைவிடவும் நான் எதிலும் குறைந்தவனில்லை. நான் உனக்கு முன்பாக பணிந்து செல்லவேண்டிய அவசியமில்லை என்று நினைப்பது கிறிஸ்துவின் சீடர்களுக்கு அழகல்ல. இயேசுவானவர் தாழ்மையுடையவராக, துன்பம் தருபவர்களுக்கு முன்பாகக் கூட பணிந்து சென்றதை நாம் அறிந்திருக்கிறோம். தாழ்மையுடன் கூடிய வார்த்தைகள் வீட்டிலும், சமூகத்திலும், சபைகளிலும் சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வரும்.
ஒருமுறை இரண்டு மலை ஆடுகள் ஒன்றுக்கொன்று எதிராக, குறுகிய பாதையில் வந்தன. அந்த பாதையில் ஒரே ஒரு ஆடுதான் கடந்து செல்லமுடியும். இப்போது இரண்டும் நேருக்கு நேர் நின்றன. விலகி பாதையை விட்டாலும் ஆபத்து. ஒருபக்கத்தில் பெரிய பள்ளத்தாக்கும் மறுபுறத்தில் பெரிய கண்மாயும் காணப்பட்டன. பின்னால் சென்று தப்பித்துக் கொள்ளலாம் என்றாலும் ஆபத்துதான். காரணம் கால் சற்று இடறினாலும் ஏதாவது ஒரு பக்கத்தில் விழுந்து மாள நேரிடும். இரண்டு ஆடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக நின்று யோசித்தன. பின்பு ஒரு ஆடு தான் நின்ற இடத்திலேயே படுத்துக்கொண்டது. மற்ற ஆடு அதன் மேல் ஏறி மறுபுறம் சென்றது. ஒரு ஆட்டின் பணிவான குணத்தினால் இரண்டு ஆடுகளும் உயிர் பிழைத்தன.
ஒரு வேளை தாழ்மையான மனிதனை பிறர் மிதித்துச் செல்லக்கூடும். கையாலாகதவன், அறிவில்லை என்று தூற்றக் கூடும். நம் ஆண்டவர் கூட சிலுவையில் தொங்கும் போது, “நீ தேவனுடைய குமாரனானால் இறங்கிவா” என்றும் “கூடுமானால் உன்னை நீயே இரட்சித்துக்கொள்” என்றும் கேலி செய்தார்களே. கலங்காமல், தாழ்மையாயிருங்கள்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். பிலிப்பியர் 2:8