சாலை ஓரமொன்றில் பிச்சைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு கால்கள் இரண்டும் செயலற்று போனபடியினால் அவன் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டான். அநேக ஆண்டுகளாக அவன் பிச்சை எடுப்பதைக் கண்ட பலர், ” உன் கால்கள் செயலற்று போனால் என்ன? ஆண்டவர் கொடுத்த கைகள் தான் சுகமாக உள்ளனவே! நீ அதினால் சிறு கைத்தொழில்கள் பயின்று வாழ்க்கையில் முன்னேறலாமே”, என்று அறிவுரை கூறினர்.
ஆனால் அந்த பிச்சைக்காரனோ எதையும் கண்டுக் கொள்வதாக இல்லை. மாறாக இந்த ஆண்டவர் ஏன் என்னை இவ்வாறு படைக்க வேண்டும். எனது கால்கள் மட்டும் சரியாக இருந்திருந்தால், நானும் மற்றவர்களைப் போல வேலை செய்து பிழைத்திருப்பேன். ஆனால் என்னை படைத்த ஆண்டவர் எனக்கு தான் எந்த தாலந்துக்ளையும் கொடுக்கவேயில்லை” என்று முயற்சியற்றவனாய் தினமும் புலம்பிக் கொண்டிருந்தான். இப்படியாய் நாட்கள் கடந்தன.
இப்படி ஜீவியம் செய்த அந்த பிச்சைக்காரன் ஒருநாள் அதிக நோய்வாய்யப்பட்டு இறந்து போனான். நெடுநாட்களாய் அதே சாலையோரத்தில் அவன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததால், அவனை அதே இடத்தில் புதைத்துவிட தீர்மானித்தனர். எனவே சிலர் கூடி அவன் அமர்ந்திருந்த இடத்தை தோண்ட முற்பட்டனர். சுமார் ஒரு அடி தான் தோண்டியிருப்பார்கள் அப்போது அவர்கள் கண்ட காட்சியை அவர்கள் கண்களே நம்ப மறுத்தன. காரணம் மண்ணுக்குள் ஏராளமான தங்க நாணயங்களும்,விலையுர்ந்த வைர நகைகளும் காணப்பட்டன. முன்னொரு நாளில் கொள்ளையர்கள் சிலரால் புதைக்கப்பட்ட இந்த செல்வத்தை அறியாமல், அதன் மீது அமர்ந்து தான் இத்தனை நாட்களும் அவன் ஒன்றுமில்லாத பிச்சைக்காரணாய் வாழ்ந்திருக்கிறான் ஆம் அவன் அமர்ந்த இடத்திலிருந்த மண்னை தினமும் சிறிது கைகளால் கிளறிவிட்டிருந்தால் கூட இச்செல்வம் அவனை சேர்ந்திருக்கும் ஆனால் அந்தோ அந்த சிறு வேலைக்கூட செய்யாமல், சிருஷ்டிகரைப் பழித்துக் கொண்டிருந்த அந்த மனிதன் முடிவு வரை பிச்சைக்காரனாகவே வாழ நேர்ந்தது.
நண்பா, இயேசப்பா நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது தாலந்துகளைக் கொடுத்திருக்கிறார். ஆனால் நாமோ அந்த பிச்சைக்காரனைப் போல் எல்லாம் இருந்தும் எனக்கு ஒன்றுமில்லை, எனக்கு மட்டும் மற்றவர்களைப் போல் பாடுகிற தாலந்து இருந்தால்….ஆடுகிற தாலந்து இருந்தால்….” என்று இல்லாத தாலந்தை நினைத்துக் கொண்டு உனக்குள் உள்ள தாலந்தை அறிய முற்படுவதேயில்லை. ஆண்டவர் உனக்கு கொடுத்திருக்கும் தாலந்தைக் குறித்து ஓர் நாளில் கணக்கு கேட்பார். எனவே அவர் கொடுத்த தாலந்தை அறிய முற்படு, அதை இயேசுவின் நாமமகிமைக்காய் பயன்படுத்திடு.