இரண்டு கிளிகள்

இரண்டு கிளிகள் ஓர் ஆலமரத்தில் அமர்ந்திருந்தன. இரண்டும் உரையாடத் தொடங்கின.

முதல்கிளி:- இன்று அதிகாலையில் ஒரு வீட்டுக்கூரையில் நான் அமர்ந்திருந்த பொழுது ஒரு நல்லஜெபத்தைக் கேட்டேன்.

இரண்டாவது கிளி:- அப்படியா! நானும் ஒரு கூரையில் இருந்தேன். என் காதிலும் ஒருவர் ஜெபம் செய்யும் சத்தம் கேட்டது. முதலில் நீ கேட்ட ஜெபத்தைச் சொல்; பிறகு நான் சொல்கிறேன்.

முதல்கிளி:- அந்த வீட்டின் தலைவர் தாமஸ். அவர் ஜெபித்தார். ஆண்டவரே, என் அண்டை வீட்டில் வசிக்கும் பீட்டர் முரட்டுசுபாவமும் முன் கோபக்காரருமாயிக்கிறார். அவரது சுபாவத்தை மாற்றி அவர் பண்புள்ளவராக மாறும் ஆற்றலை அவருக்குத் தாரும்!

இரண்டாம் கிளி:- நான் பீட்டர் வீட்டுக் கூரையில் தான் இருந்தேன். பீட்டர் ஜெபித்தார். ஆண்டவரே, என் அண்டை வீட்டு நண்பர் தாமஸ் வசதியானவர் தான். ஆனாலும் பேராசைக்காரராக இருக்கிறார். தன் பொருளை எல்லாம் ஏதும் இல்லாத மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்து வாழும் நல் மனத்தை அவருக்குத் தாரும்!

முதல்கிளி:- இருவருமே மற்றவருக்காக இறைவனிடம் வேண்டினார்கள். அது நல்ல குணம் தானே!

இரண்டாவது கிளி:- அப்படி இல்லை. தான் வணங்காக் கழுத்துள்ள முரடன் என்று பீட்டர் அறிவார். “ஆண்டவரே என் தீயகுணங்களை வெல்லும் ஆற்றலை எனக்குத் தாரும்’ என்று அவரே ஜெபித்திருக்க வேண்டும். அதுபோல, தான் ஒரு பேராசைக்காரன் என்று தாமஸ் அறிவார். அதனால், “ஆண்டவரே, ஏதும் கிடைக்காத ஏழை எளியவருக்கு என் செல்வத்தைப் பகிர்ந்தளித்து வாழும் பரந்த உள்ளத்தை எனக்குத்தாரும்’ என்று தாமஸே ஜெபித்திருக்க வேண்டும்.

முதல்கிளி:- நீ சொல்வது தான் சரி! மற்றவரின் உள்ள குறைகளையும் பலவீனங்களையும் மட்டுமே மக்கள் பார்ப்பது எவ்வளவு அறியாமை! அவர்களிடம் உள்ள நற்பண்புகளைக் கண்டறிந்து அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லி ஜெபித்தால் மானிடம் எவ்வளவு சிறப்புறும்!?

உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? மத். 7:3.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE