ஒரு வேடன் காட்டு வழியே நடந்து போனான். ஆற்றின் கரையில் அழகிய கற்கள் நிறையக் கிடக்கக் கண்டு அவைகளைப் பொறுக்கினான்.
அந்த அழகிய கற்களைக் கவணில் வைத்து வீசி பறவைகளைக் கொன்று வீழ்த்த உபயோகித்தான். அவன் எறிந்த ஒவ்வொரு கல்லும் ஆற்றினுள் விழுந்து ஒழிந்தன.
இறுதியாக ஒரே ஒரு கல் மட்டும் மீந்தது. அவன் வேட்டையை முடித்து வீட்டுக்குப் போகும் போது அந்தக்கல் ஒன்றை மாத்திரம் கூடக் கொண்டு சென்றான்.
அந்தப் பட்டணத்தின் இரத்தின வியாபாரி இந்தக் கல்லைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவன், இது விலைமதிக்க முடியாத மாணிக்கக் கல் என்றான்.
வேடன் அலறினான். குருவிகளை வேட்டையாட ஆற்றிற்குள் எறிந்த ஒவ்வொரு கல்லையும் எண்ணி எண்ணி மனம் புண்ணானான்.
இனி மனம் வருந்தி பயனேது என்று ஆறுதல் அடைந்தவனாக அந்தக் கல்லுக்குரிய விலையை வாங்கிக் கொண்டு, கிடைத்தது மிச்சம் என்ற மகிழ்ச்சியில் சென்றான்.
ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு மாணிக்கக் கற்களை இலவசமாக கிருபையாக அளிக்கிறார். அவைகளை நம்மில் பலர் சிற்றின்பங்களிலும், உலகக் காரியங்களிலும் செலவிட்டு விடுகின்றனர். மகத்தான வரங்களை வீணடித்து விடுகின்றனர்.
கடந்து போன காலங்களைப் பற்றிய கவலையிலேயே ஆழ்ந்துவிடாமல் நமக்கு முன் மீதியிருக்கிற ஒவ்வொரு நிமிஷத்தையும் பயன்படுத்திக் கொள்வோம்.