‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஐரிஸ் (Iris) என்பது அவர்களின் பெயர். அப்பா என்ஜினீயராக அமெரிக்காவில் பணிபுரிந்துவந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் ஒரு மருத்துவராகுவதற்கு படித்துக்கொண்டிருக்கும் போது இருபத்தைந்து வரன்கள் திருமணத்திற்காக வந்தும், அதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இருபத்தாறாவது வரனாக வந்த கால்நடை மிஷனரி மருத்துவர் ராக் பால் (Rac Paul) -யை 1972 ல் மணமுடித்தார். தன்னுடைய மருத்துவப்படிப்பு முடிவடைந்தவுடன் நேராக இந்தியாவில் உள்ள மல்காங்கிரி (Malkangiri) என்கின்ற காட்டுப்பகுதிக்குள் வந்தார் தன் கணவனுடன். ஜீப்பில் செல்கின்ற இவர்கள், அங்கிருந்து 27 மணிநேரம் நடந்து இந்த மல்காங்கிரி காட்டிற்குள் வரவேண்டும். அப்படி ஒரு கிராமத்தை பார்த்ததில்லை என்று சொல்கிறார் ஐரிஸ். அந்த கிராமத்தில் தண்ணீர் வசதியோ, மின்சார வசதியோ கிடையாது. மாட்டு சாணத்தை வைத்து அந்த தரையை மறுபடியும் மறுபடியும் அமைத்துக்கொள்ள வேண்டும். அதை செய்யும் பொழுது ஒருநாள் அழுதுவிட்டார். ஆனால் ஆண்டவரின் சத்தம் உண்டாகி,”நான் மாட்டுத்தொழுவத்தில், மாட்டு சாணத்தின் மத்தியில் தான் பிறந்தேன் என்று”. உடனே அழுகையை நிறுத்திய ஐரிஸ் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு அதிலே வாழப்பழகிக்கொண்டார்.

சில வாரங்கள் கழித்து, மலையின்மேலேறி இன்னும் மருத்துவர்கள் இல்லாத இரண்டு கிராமத்திற்கு சுவிசேஷபணியாக மருத்துவம்செய்ய சென்றனர். காலை 4 மணிமுதல் ஜனங்கள் வரிசையில் நிற்க, கடினமாக இருந்தாலும் ஐரிஸ் அந்த ஊழியத்தை மிகவும் நேசித்தார். ஆனால் அவர்களை மனமடிவாக்குகிற ஒரு விஷயம் என்னவென்றால், பதினைந்து வருடமாக அங்கே சுவிசேஷப்பணியை மேற்கொண்டும், எவ்வளவோ ஞானஸ்த்தானத்தை குறித்து பேசியும் ஒருவர் கூட ஞானஸ்தானம் எடுக்க முன்வரவில்லை. பதினைந்து வருடமாக ஒவ்வொரு மாதமும் இந்தியன் மிஷன் சொசைட்டி யில் இருந்து அனுப்பப்படும் படிவத்தில், எத்தனைபேருக்கு ஞானஸ்தானம் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு “0” என்றே பதில் கொடுத்தது மிகவும் வேதனையளித்தது. சில சமயங்களில் இந்த ஊழியம் வேண்டாம் திரும்பிப்போய் விடலாம் என்று கூட உணர்ந்ததாக சொல்கிறார் ஐரிஸ்.

பின்னர், 1986 இல் பால் சரீர பெலவீனமடைந்தார். சிறுநீரகம் செயலிழந்தநிலைமையில் சென்னைக்கு வந்தார்கள். பால்-க்கு சிறுநீரக அறுவைசிகிச்சை நடந்துக்கொண்டிருந்த நேரத்தின் இடையிலேயே அவருடைய உயிர் அவரைவிட்டு பிரிந்தது. அப்போது 42 வயதான ஐரிஸ், தன்னுடைய நான்கு பிள்ளைகளுடன் கதறிஅழுதுகொண்டிருந்த நேரத்தில், இங்கே சென்னையில் ஒரு மருத்துவமனை உருவாக்கி இங்கேயே இருக்க வற்புறுத்தியிருக்கின்றனர் சொந்தபந்தங்கள்.

ஆனால் ஒன்பது நாட்கள் சென்றபின் மறுபடியும் ஜீப் எடுத்து மல்காங்கிரி கிராமத்திற்கு அந்த ஜனங்களை பார்க்க சென்றுவிட்டனர் ஐரிஸ் மற்றும் அவரது பிள்ளைகள். மறுபடியும் காலை முதல் இரவு வரை மருத்துவம் செய்ய தொடங்கினர். அதைக்கண்ட அக்கிராமத்து ஜனங்கள், “ஐரிஸ் மற்றும் அவர் குடும்பத்தினர் உண்மையிலேயே நம்மை நேசிக்கின்றனர்; அதனால்தான் திரும்பவும் நமக்காக வந்திருக்கிறார் என்றும், அப்படியானால் அவர்கள் நேசிக்கும் அந்த இயேசுவும் கண்டிப்பாக உண்மையான கடவுளாக இருக்கக்கூடும்” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அதிலிருந்து சரியாய் ஆறு மாதத்திற்குள் 36 நபர்கள் ஞானஸ்தானம் எடுக்க முன்வந்தார்கள். இப்போது அங்கே குறைந்தது 5,000 விசுவாசிகள் இருக்கின்றார்கள் அந்த மல்காங்கிரி கிராமத்தில்.

2020 ஆம் ஆண்டோடு நாற்பத்தொன்பது ஆண்டுகள் இந்த மல்காங்கிரி கிராமத்தில் நிறைவடைந்த நிலையில் ஐரிஸ் அவர்கள் சொல்கிறார்கள்,”நாம் எதிர்பார்க்கும் நேரத்தில், நாம் எதிர்பார்க்கும் விதத்தில் ஆண்டவர் நமக்கு அற்புதங்கள் செய்கிறது இல்லை; ஆனால் அவருடைய நேரத்தில் அவர் செய்யும்பொழுது அது மிகவும் பயங்கரமாயிருக்கிறது என்று கற்றுக்கொண்டேன்” என்கிறார். மேலும், ‘அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்’ , ‘எனக்கு பிடித்தமான இந்த வார்த்தையை பிடித்துக்கொண்டு, கடினம்தான் ஆனாலும் என் தேவன் எனக்கு பெலன் தருகிறார். அவரோடு இணைந்து இந்த ஊழியத்தில் தொடர்ந்து ஓடுவேன்” என்று புன்னகையுடன் கூறுகிறார் ஐரிஸ் அவர்கள்.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE