கொரோனாவால் சபையின் கட்டமைப்பு உடையுமா?

இது மெகா சர்ச் என்று சொல்லக்கூடிய பெரும் சபைகளின் காலம். ஆங்காங்கே பெரிய பெரிய சபை கட்டிடங்கள். பல்லாயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ஜனங்கள்.பெரிய ஐ.டி. கம்பெனியை போன்ற தோற்றம். பல்வேறு நேரங்களில் பல ஆராதனைகள். பேஸ்புக், யூடியூபில் நேரடி_ஒளிபரப்பு என அமர்க்களப்படுத்தும் சபைகள் உலகமெங்கும் தோன்றிவிட்டன.

கொரிய_தேசத்தில் பாஸ்டர் பால் யாங்கி சோ அவர்களின் சபையில் 20 வருடத்திற்கு முன்பே 8 லட்சம் பேர் இருந்தார்கள். இது போல் லட்சம் விசுவாசிகளை தாண்டிய சபைகள் உலகமெங்கும் அநேகம் உருவாக ஆரம்பித்தன. இந்தியாவில் ஹைதராபாத்தில் 2 லட்சம் விசுவாசிகளை கொண்டதாக உருவெடுத்தது கல்வாரி டெம்பிள் என்ற சபை.

சபை ஊழியம் செய்ய வரும் எல்லோருக்கும் ஒரு கனவு. என்னுடைய சபை ஒரு மெகா சபையாக மாற வேண்டும். வளர்ந்தால், பெரிய கட்டிடம், ஆயிரக்கணக்கில் மக்கள், கோடிக்கணக்கில் வருமானம். அதை வைத்து நிறைய ஊழியங்களை செய்யலாம் என்ற ஆசையில்லாத இளம் போதகர்களே இல்லை.

ஆனால் இன்று கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் சபைகள் பூட்டப்பட்டு விட்டது. இந்த 21 நாட்களுக்கு அடுத்து மேலும் ஊரடங்கு நாட்களை கூட்டலாம் என்று சொல்லப்படுகின்றது. அதன் பின்பு கூட அதிக நபர்கள் கூடும் இடங்களுக்கு தடையுத்தரவு கொடுக்க நேரிடலாம்.

இதன் விளைவாக சபை என்கிற கட்டமைப்பு உடைந்து போகுமா?

மூன்று, நான்கு வாரங்கள் சபையில் ஆராதனை நடத்தாமல் விடுவதால் விசுவாசிகளின் நிலைமை என்னவாகும்? எத்தனை விசுவாசிகளை ஆன்லைன் ஆராதனைகள் மூலம் தொடர்பு கொண்டு ஊழியம் செய்ய முடியும்? நாம் ஆன்லைனில் நடத்துகின்ற ஜெபத்தையும், பிரசங்கத்தையும் எந்தளவு விசுவாசிகள் கேட்கிறார்கள். கேட்டு கடைபிடிக்கிறார்கள்? சபையில் காணிக்கை வரவு இல்லாததால் சபையின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு என்ன செய்வது? இதுவரை ஒரு அமைப்பாக நடந்து வந்த சபை என்ற கட்டமைப்பே உடைந்து போகும் போல தெரிகின்றது.

சபை உடைந்து போகுமா? அழிக்கப்படுமா? இல்லவே இல்லை. இந்த கல்லின் மேல் என் சபையைக்_கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத் 16:18) என்று இயேசு சொல்லியிருக்கிறாரே! சபையை அழிக்க எந்த ஒரு சூழ்நிலையினாலும் முடியாது. சபை இயேசுவின் சரீரமாயிருக்கிறது.

சபையின் கட்டமைப்பு அழிந்து போனாலும் சபை அழிந்து போகாது. விசுவாசிகள் தான் சபையே தவிர கட்டமைப்பு சபை அல்ல.இயேசு சபைக்கென ஒரு கட்டமைப்பையும் உருவாக்கவில்லை. அதனால் கட்டமைப்புகள் தவறு என்று நான் சொல்லவில்லை. கட்டமைப்புகள் இல்லாமல் சபையே இல்லை என்று நினைக்க கூடாது என்றே சொல்கிறேன். எந்த ஒரு அமைப்பு நிலைத்திருப்பதற்கும் அதன் கட்டமைப்பு மிகவும் முக்கியம். ஆனால் சபை மட்டும் கட்டமைப்பு இல்லாமலேயே நிலைத்திருக்கும் ஆற்றல் பெற்றது. இதற்கு உதாரணம் சீனாவில் காணப்படும் வீட்டு சபைகள்.

ஆதிசபையினர் வீடுகளிலே கூடி ஆராதித்தனர், அப்பம் பிட்டார்கள் ஜெபித்தார்கள் சுவிஷேச ஊழியம் செய்தார்கள் வளர்ந்து பெருகினார்கள். அப்போஸ்தலர்களாயிருந்த சீஷர்கள் நேரிலும் கடிதம் மூலமாகவும் அவர்களுக்கு போதித்தார்கள், உற்சாகப்படுத்தினார்கள்.இதன் விளைவு என்னவென்றால் எல்லா விசுவாசிகளும் அனலுள்ளவர்களாய் எழுந்து பிரகாசிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள். சாதாரண விசுவாசிகளான பிலிப்புவும் ஸ்தேவானும் செய்த கிரியைகளை அப்போஸ்தலர் நடபடிகளில் வாசித்து பாருங்கள். சுவிஷேச ஊழியம் தீவிரமாய் நடைபெற்றது.

மிகக் கடுமையான உபத்திர காலத்திலும் உயிரையும் பொருட்படுத்தாமல் தேவனை பின்பற்றிய வைராக்கியமான விசுவாசிகள். உபத்திரவத்தினிமித்தம் சிதறிப் போன இடங்களிலெல்லாம் சபைகளை உருவாக்கிய மிஷனரிகளான ஆதிசபை விசுவாசிகள்.

இன்று சில வாரம் கூடி ஆராதிக்க முடியாத நிலையில், விசுவாசிகள் சிதறி விடுவார்களோ, பின்வாங்கி விடுவார்களோ என்று அச்சப்படும் நிலை. பார்வையாளர்களாகவே சபையில் கடைசி வரைக்கும் இருந்துவிடும் விசுவாசிகள். சிறிய பிரச்சனைக்கும் யராராவது நம் தலையில் கைவைத்து ஜெபம் பண்ணுவார்களா என்று ஏங்கும் விசுவாசிகள். வேதத்தின் எந்த பகுதியையும் தானே படித்து தியானித்து விளங்கி கொள்ள முடியாத விசுவாசிகள். தங்கள் ஆவிக்குரிய வாழ்விற்காக தாங்கள் தேவனை நோக்கி நேரடியாய் பார்க்காமல் முழுக்க முழுக்க பாஸ்டரையோ அல்லது ஏதாகிலும் ஒரு சுவிஷேசகரையோ அண்டிக் கொண்டிருக்கும் விசுவாசிகள். அவர்களை அந்த அளவிற்கு மேல் வளர்க்க விரும்பாத சில ஊழியர்கள். என்னே பரிதாபம்.

ஆதி நிலைக்கு திரும்புவோம்.

ஆதிசபையின் எழுப்புதலுக்கு நேராய் திரும்புவோம். வீடுகளை எழுப்புதல் மையங்களாக்குவோம்.

சீனாவில் கம்யூனிச அரசு வந்தபின்பு சபை ஆராதனை நடத்த முடியவில்லை. உபத்திரவத்தினிமித்தம் சபையார் ஒளிந்து ஒளிந்து, சுமார் 10 பேர் கொண்ட, சிறு சிறு கூட்டமாய் அண்டர்கிரௌன்ட்களில் ஆராதிக்க ஆரம்பித்தார்கள். விசுவாசிகளாய் வேதத்தை ஆராய ஆரம்பித்தார்கள். ஜெபிக்க ஆரம்பித்தார்கள், சாட்சியாய் வாழ ஆரம்பித்தார்கள். அரசின் கடும் அடக்குமுறையின் மத்தியிலும் கோடிகளாய் பெருகிநிற்கிறார்கள். கட்டமைப்பு இல்லாமலேயே சபை வளர்ந்து, எழுப்புதல் பெருகி இருக்கிறது.*

இந்த மூன்று வாரங்கள் கர்த்தர் நமக்கு தந்திருக்கும் ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சபையின் ஐக்கியத்தில் மற்றும் உங்கள் போதகருடன் இணைப்பில் இருக்கும் அதே தருணத்தில் குடும்பமாய் அமர்ந்து தேவனை ஆராதியுங்கள், வேதத்தை நன்கு வாசியுங்கள். நீங்களே கர்த்தருடைய சத்தத்தை கேளுங்கள். ஆவியானவரின் துணையோடு வேதத்தை நீங்களே தியானித்து வியாக்கியானம் பண்ணுங்கள். சத்தியத்தை குறித்து குடும்பத்தினருடன் கலந்துரையாடுங்கள். உங்கள் சந்தேகங்களை உங்கள் போதகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஏற்கனவே செல்லும் சபையின் ஐக்கியத்தை மற்றும் உங்கள் ஆவிக்குரிய தகப்பனின் உறவை முறித்துக் கொண்டு தன்னிச்சையாக செயல்படுங்கள் என்று சொல்லவில்லை. எந்த நிலையிலும் உங்களை வழிநடத்த, ஆலோசனை, கண்காணிக்க, ஆலோசனை கொடுக்க சபையும், சபை ஊழியர்களும் மிகவும் அவசியம். அவர்களோடு இணைப்பில் இருந்து கொண்டே இப்படிப்பட்ட இக்கட்டுக் காலத்திலும் ஊழியம் தடையின்றி நடக்க உங்களை ஆயத்தப்படத்துங்கள் என்று சொல்கிறேன். தடை நீங்கிய பின் நம்முடைய சொந்த சபைகளுக்கு சென்று ஆராதிக்கத்தான் போகிறோம்.

இந்த கொரோனவுக்கு பின்னர் மத்தேயு 24ல் சொல்லப்பட்ட பிரகாரம் கடுமையான யுத்தம் வரலாம், கிறிஸ்தவத்திற்கு கடும் உபத்திரவம் வரலாம். அப்போது இந்த ஊரடங்கு தடையோடு சேர்ந்து, இன்டெர்நெட்டும் இல்லாத ஒரு நாள் வரப்போகிறது, அந்நேரம் பேஸ்புக்கிலோ, யூடியூபிலோ லைவ் ஆராதனை கூட நடத்த முடியாது. அப்போது நாம் என்ன செய்ய போகிறோம்?

உங்கள் சபையின் வீட்டு சபைக்குழுக்களை பலப்படுத்துங்கள். சபையின் ஊழியத்தலைவர்களுக்கு அதிக பயிற்சி கொடுங்கள். எப்படிப்பட்ட இக்கட்டு வந்தாலும், சபை மேற்கொண்டு பெருகும் வளரும். கர்த்தருடைய வருகை வெகு சமீபம்.சுவிஷேச பணியோ வெகு அதிகம்.

சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Credit to Pastor. Reegan DhanaSekar Facebook  Thunaiyalare Ministries

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE