சர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய வரலாறு.

முன் நாட்களில் வேதாகமம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான காரியமாகும். இந்தியாவில் மட்டுமல்ல, கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லி கொள்ளும், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இதே நிலை! வேதாகம தட்டுப்பாட்டினால் பைபிள் சொசைட்டி என்று சொல்லப்படும் வேதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் வேதாகமம் அனைவருக்கும் கிடைக்கும்படியாக இந்த சங்கம் உதவி செய்தது. இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறுமிதான் காரணமாக இருந்தாள். அதை குறித்து பார்ப்போம்.

மேரி ஜோன்ஸ் என்னும் சிறுமி 1784ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தாள். அவளுடைய தகப்பன் நெசவு தொழில் செய்பவராயிருந்தார். மேரி தன் 8ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டாள்.

அவளுடைய கிராமத்திற்கு தாமஸ் சார்லஸ் என்பவர் ஏழை குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு எழுத்துக்களை கற்று கொடுக்க வருவார். அங்கு படிக்க கற்று கொண்ட மேரி, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பண்ணைக்கு சென்று அங்கிருந்த வேதாகமத்தை எடுத்து படிப்பது வழக்கம். வேதாகமத்தை படிக்க படிக்க, தனக்கென்று சொந்தமாக ஒரு வேதாகமம் வேண்டும் என்கிற ஆவலும் எண்ணமும் மேரிக்கு உருவாக ஆரம்பித்தது.

ஆனால் அந்த எண்ணம் ஈடேறாத காலம். ஏனென்றால் பணம் கிடைப்பது என்பது மிகவும் கடினமான காலமது. அப்படி பணம் இருந்தாலும், எந்தவித உதவியுமின்றி, வாகன வசதிகளுமின்றி, 25 மைல் தூரத்தில் இருந்த பாலா என்னுமிடத்தில் மட்டுமே வேதாகமம் கிடைத்தது. அப்படி போனாலும், போகும் நேரத்தில் வேதாகமம் இருக்கும் என்று சொல்ல முடியாது.

ஆனால் மேரி மனம் தளரவில்லை, கொஞ்சம் கொஞ்சமாய் பணத்தை சேர்க்க ஆரம்பித்தாள். காய்களை விற்பது, வீடுகளில் சென்று வேலைகளை செய்வது இப்படி சிறுசிறு வேலைகளை செய்து, அதில் வரும் சிறு வருமானத்தை சேர்த்து வைத்து, கடைசியில் அவளுக்கு வேதாகமம் வாங்க தேவையான பணம் ஆறு ஆண்டுகளுக்கு பின் கிடைத்தது.

அதை சந்தோஷமாய் எடுத்து கொண்டு, மேரி வெறுங்கால்களோடு, (செருப்பு வாங்க பணம் இல்லை) 25 மைல் தூரத்தில் இருந்த பாலாவிற்கு செல்ல ஆரம்பித்தாள். வழியில் இருந்த கற்களையும் முட்களையும் பொருட்படுத்தாது, ஆறுகளையும், குன்றுகளையும் கடந்து, கடைசியில் பாலாவை நோக்கி சென்றடைந்தாள். பாலாவில் தாமஸ் சார்லஸ் என்பவரிடம் மாத்திரமே வேதாகமம் விற்கும் கடை இருந்தது. ஆனால் என்ன ஒரு கஷ்டம், அங்கிருந்த வேதாகமங்கள் எல்லாம் விற்று போயிருந்தன, அல்லது யாராவது வேதாகமம் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்து போயிருந்தனர். அதை கேட்ட மேரி அழ ஆரம்பித்தாள். தன் இருதயம் வெடித்து விடுவது போல அவள் அழுவதை கண்ட சார்லஸ், வேறு ஒருவர் ஆர்டர் பண்ணியிருந்த வேதாகமத்தை அவளுக்கு கொடுத்தார். அதை பெற்று கொண்ட அவளுடைய ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சந்தோஷமாய் வீட்டிற்கு திரும்பினாள்.

மேரி இப்படி 25 மைல் தூரம் வேதாகமத்தை வேண்டி வந்தது, தாமஸ் சார்லஸின் இருதயத்தை தொட்டது. மேரியை போல எத்தனையோ பேர் வேதாகமம் வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் வாங்க முடியாதவர் உண்டு என்பதை உணர்ந்து, அவர் Council of the Religious Tract Society க்கு கடிதம் எழுதினார். அதன்படி 1804ஆம் ஆண்டு British and Foreign Bible Society ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் இங்கிலாந்து தேசம் முழுவதற்கும் வேதாகமம் கிடைக்கும்படியாக முயற்சிகள் எடுக்கப்பட்டது.

அதன்பின் மற்ற நாடுகளுக்கும் வேதாகமம் கிடைக்கும் முயற்சியில் வேதாகம சங்கம் ஈடுபட்டது. அநேக ஆண்டுகளுக்குப்பின் இப்போது எல்லா நாடுகளிலும் வேதாகம சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழு வேதாகமோ, அல்லது வேதாகமத்தின் பாகங்களோ, மொழி பெயர்ப்பு செய்யும் வேலையை இந்த சங்கம் செய்கிறது. இதுவரை மொத்தம் 2,500க்கும் மேலான மொழிகளில் வேதாகமம் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலே நாம் திருப்தி அடைந்து நின்று விடக்கூடாது. கர்த்தரின் வருகைக்குள்ளாக மொழி தெரிந்த ஒவ்வொரு மனிதனின் கைகளிலும், அவனுடைய மொழியில் வேதாகமம் கிடைக்கும் வரைக்கும் நாம் ஜெபிப்பதிலும், அதற்கு ஒத்துழைப்பதிலும் ஓய்ந்திருக்க கூடாது.

உலகில் எத்தனையோ மேரி ஜோன்கள் தங்களுக்கென்று ஒரு வேதாகமம் கூட இல்லாத நிலையில் இருக்கலாம். ஒரு வேளை வேதாகமம் இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்த மொழியில் வேதாகமம் இல்லாதிருக்கலாம்… அவர்களுக்காக ஜெபிப்போமா?

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

கிறிஸ்மஸ் Bike Ride திருச்சி மக்களே ரெடியா?

அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள், வரும் ...
Read More

Christsquare.com Star Singer 2021

கிறிஸ்துவ நன்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
Read More
MORE