அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா உன்
அடைக்கலம் அடைக்கலமே
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு
ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்
கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே
கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே
சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே
என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதினில் எனக்கும் பங்கில்லையோ அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ