கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங்கருணை
வெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சனநிதியை
உள்ளமுவப் புறுதேனை உயிர்க்குயிரை உலவாத
தெள்ளமுகைத் தீங்கனியைச் சிலுவைமிசைக் கண்டேனே
படிசாய்த்த பெரும்பாவப் பரஞ்சுமந்து பரமர் திரு
மடிசாய்த்த திருமேனி வதைந்திழி செங் குருதியுக
முடிசாய்ந்த பெருமானை மூதலகை தலைநசுக்கிக்
கொடிசாய்த்த கொற்றவனைக் குருசின்மிசைக் கண்டேனே
மூவினைக்கு மும்முதலாய் மும்முதலு மொருமுதலாந்
தேவினைக்கை தொழுதேத்துந் திரிகரண சுத்தருந்தம்
நாவினைக்கொண் டேத்தரிய நல்லறத்தின் தனித்தாயைத் தீவினைக்கோர் அருமருந்தைச் சிலுவைமிசைக் கண்டேனே
மூவாத முதல்வனை முதுசுருதி மொழிப்பொருளை
ஓவாத பெருங்குணத்த உத்தமனை உலகனைத்தும்
சாவாத படிகாக்கத் தனுவெடுத்துத் துஜங்கட்டுந்
தேவாதி தேவனையான் சிலுவைமிசைக் கண்டேனே
மறம் வளர்க்குங் களருளத்தை வளமலிதண் பணையாக்கி அறம் வளர்க்கும் அருண்முகிலின் அன்புமழை மாரிபெய்து புறம் வளர்க்கும் இரக்ஷிப்பின் புகழமைந்த புண்ணியத்தின் திறம் வளர்க்குஞ் செழுங்கிரியைச் சிலுவைமிசைக் கண்டேனே
காயொளியில் கதிர்பரப்புங் களங்கமில் நீதியின் சுடரைப் பாயொளிகொள் பசும்பொன்னை பணிக்கருஞ் சிந்தா மணியைத் தூயொளிகொள் நித்திலத்தைத் தூண்டாத சுடர் விளக்கைச்
சேயொளிகொள் செம்மணியைச் சிலுவைமிசைக் கண்டேனே