உங்கள் வீட்டுக்கும் இப்படிப்பட்ட பாதையா?

அப்பா! அப்பா என்று சொன்னாலே நமக்கு மகிழ்ச்சி தான். எனக்கு தெரிந்த ஒரு அப்பா உண்டு. அவருக்கு ஒரு செல்ல மகள். மகள் மீது அதிக பாசம் வைத்திருக்கும் தந்தை தினமும் அதிகாலையில் வேலைக்கு சென்றுவிடுவார். அக்குழந்தை எழும்புவதற்கு முன்பே அவர் போய்விடுவார். ஆனால் மாலையில் சீக்கிரமே வீட்டிற்கு வந்து குழந்தையிடம் பாசத்தை கொட்டி விடுவார். அவருடைய வீடு, மரங்கள் செடிகள் சூழ அமைந்திருந்தது. தினமும் காலை வேலைக்குச்செல்ல வெளியேவரும் தகப்பன் அந்த பாதையை கவனமாய் பார்த்துக்கொண்டே வருவார். ஏதும் முள் கல் என எதும் கிடந்தால் அதை எடுத்து ஓரமாக போட்டுவிட்டு செல்வார். அதை ஒவ்வொரு நாளும் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருந்தார். அதற்கு காரணம் என்ன என்று யோசிக்கின்றீர்களா?

அவருடைய செல்லமகள் காலையில் எழுந்து கிளம்பி கொஞ்சம் நடந்து சென்று பள்ளிப்பேருந்தில் ஏறி பள்ளிக்கு செல்வாள். அப்படியாக அந்த கற்கள் முட்கள் நிறைந்த பகுதியில் செல்லும் போது, முள் குத்திவிட்டால் மகளால் தாங்கிக்கமுடியாது, அழுவாள், வழியில் துடிப்பாள். அந்த கற்கள் முட்கள் சூழ்ந்திருக்கும் பகுதியில் நடக்கவிருக்கும் மகள் எந்த காயமும் இல்லாமல் நடக்கவேண்டும் என்று எண்ணியே அவள் தகப்பன் தினமும் பாதையை சரிசெய்து கொண்டே செல்வார்.

வேதத்தில் ஒரு வசனம் உண்டு, “நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளை செவ்வையாக்குவேன்”. உங்களுடைய பாதையும் இப்படிப்பட்டதாக இருந்தால் கவலைபடாதிருங்கள். ஒரு உலகப்பிரகாரமான ஒரு தகப்பன் தன் பிள்ளையின் கால்களில் ஏதும் குத்திவிடக்கூடாது என்று நினைக்கும் போது நம் பரமத்தகப்பனான இயேசு கிறிஸ்து எப்படியெல்லாம் நம்மை பாதுகாப்பார். நம்மை ஏந்தி சுமக்கும் இயேசு நம்கூட இருக்கும்போது நாம் கவலைகொள்ள அவசியமில்லை. எந்தக்காரியம் செய்தாலும் அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு முன்சென்று கோணலான பாதைகள் அதாவது அப்பாதைகளில் இருக்கும் தடைகளை உடைத்தெறிந்து செவ்வைப்படுத்துவார். நாமும் தைரியமாக தகப்பன் நம்கூட இருக்கும் நம்பிக்கையில் சென்று, அவர் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோமாக.

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE