பண ஆசையா….

பிரான்சு நாட்டில் கஞ்சத்தனம் கொண்ட மனிதன் ஒருவன் திருமணம் கூட செய்து கொள்ளாமல் பணம் சேர்த்து வைப்பதொன்றையே தன் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வங்களைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துக் கொண்டே இருப்பதும், இன்னும் அதிகமாக சொத்து சேர்ப்பது எப்படி என்பதை சிந்திப்பதுவே அவனது வேலையாக இருந்தது. பல நாட்களாக அவனைக் காணவில்லை. உறவினர் யாரும் அவனுக்கு இல்லாததால், அரசாங்கம் அவனுடைய வீட்டையும் சொத்தையும் எடுத்துக்கொண்டு ஏலமிட்டது. ஏலத்தில் அந்த வீட்டை எடுத்தவர் கண்ட காட்சி அவரை நடு நடுங்க வைத்தது. அந்த வீட்டிற்குள்ளே தன்னுடைய ஏராளமான, தங்கம், வைரம் நகைகளுக்கிடையே அந்தக் கருமி செத்துக் கிடந்தான். அவனுடைய வாயில் மெழுகுவார்த்தி ஒன்றிருந்தது. (அதைத் தான் பசிக்காக அவன் உண்ண எண்ணியிருக்கவேண்டும்).

இதைப் போன்ற ஒரு சம்பவத்தை லூக்கா 12:16-21 வசனங்களில் இயேசு கூறுகிறதைப் பார்க்கிறோம். அதில் வரும் செல்வந்தனிடம் தேவன் “மதிகேடனே உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்” என்றார் என்று காண்கிறோம்
.
செல்வம் சேர்ப்பதிலோ, செல்வந்தவர்களாக வாழ்வதிலோ எந்த தவறுமில்லை, ஆனால் செல்வம் சேர்ப்பது ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்க்கை நடத்துவதுதான் தவறு. இதுவே அநேகரை தேவனிடத்திலிருந்து பிரித்து சீரழித்திருக்கிறது. அநேக நல்ல விசுவாசிகளின் விசுவாசக் கப்பல் கவிழ்ந்து போனதற்குக் காரணம் பண ஆசையே. தேவனுடைய பிள்ளைகள் ஜாக்கிரதையாக வாழ்ந்து வாழ்க்கைப் பயணத்தில் நெறிகெட்டுவிடாமல் தேவ ராஜ்யம் சேர்வது அவசியம். கிறிஸ்துவே நமது மிகச்சிறந்த செல்வமாகவும், நம்முடைய வாழ்வில் கிடைப்பதற்கரிய பொக்கிஷமாகவும் இருக்கிறார். இதைவிட வேறொரு பொக்கிஷத்தை நாம் நாடவும் தேடவும் அவசியமில்லை.

“மனுஷன் உலகம் முழுவதையம் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மத்தேயு 16:26

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE