நன்றி இயேசப்பா !

வில்சனுக்கும் பக்கத்தில் குடியிருக்கும், டேவிடுக்கும் ஆகவே ஆகாது. ஊரறிய சண்டை போடவில்லையென்றாலும் மனதுக்குள் ஏகப்பட்ட வெறுப்பு. இது எப்படி துவங்கியது என்பது இருவருக்குமே நினைவில்லை. ஆனாலும் வெறுப்பை மட்டும் மறக்கவில்லை. இருவரின் வீட்டுக்கும் நடுவில் ஒரு சிறிய மணை (இடம்) இருந்தது. இருவருக்குமே அதை வாங்கி தங்கள் வீட்டுடன் இணைத்துக் கொள்ள ஆசை. அதன் சொந்தக்காரர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார். அந்த சிறிய இடம் அவருக்கு தேவையில்லை என்பதும், அதை அவர் விற்பனை செய்யப் போகிறார் என்பதும் வில்சனுக்குத் தெரியவந்தது. கேட்டதிலிருந்தே அவனுக்கு கை கால் ஓடவில்லை. டேவிடுக்கு இன்னும் இது தெரியாது. தெரிந்தால் அவ்வளவு தான். வில்சனுக்கு இடம் கிடைத்த மாதிரிதான். வில்சனுக்கு அவரது மொபைல் எண் ஒரு நண்பரின் மூலம் கிடைத்தது. அவரோடு பேசும் போது அவர் கூறிய தொகை மிகவும் குறைவாகவே இருந்தது. இதுவரைக்கும் சரிதான் . ஆனால் அவர் வரச்சொன்ன நாள் ஞாயிற்றுக்கிழமை. அதிலும் அன்று திருவிருந்து இருந்தது. ஆனால் என்ன செய்வது? டேவிட் வேறு இரண்டு நாட்களாக வாசலில் நின்றபடி இவனைப் பார்த்தபடியே யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருந்தான். வில்சனுக்கு பயம் வந்துவிட்டது.

” இது என் நெடுநாள் கனவு. எதற்காகவும் இதை விட்டுக் கொடுக்க மாட்டேன். திருவிருந்து அடுத்த முறை எடுத்துக் கொள்ளலாம். டேவிடுக்கு தகவல் போறதுக்கு முன்னால நான் வாங்கியே தீருவேன் “. மனைவி, பிள்ளைகளை ஆட்டோவில் ஏறி ஆலயத்துக்குப் போகச்சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு இடத்திற்கு முன்பணம் கொடுக்கக் கிளம்பினான். மனதுக்குள் கர்த்தரின் பந்தியை அலட்சியப் படுத்துகிறோம் என்ற உறுத்தல். இருந்தாலும் இடம் பறி போய்விட்டால் என்ன செய்வது ? இப்போது கிளம்பினால்தான் இன்னும் மூன்று மணி நேரத்தில் அவரது ஊரை அடையலாம். கார் வேகமாய் போய்க் கொண்டிருந்தது . இன்னும் இரண்டே மணிநேரந்தான். மனதில் உற்சாகம். தீடிரென்று தூரத்தில் வாகனங்கள் செல்லாமல் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவனது காரையும் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நகர்த்த முடியவில்லை. வழி எதனாலோ தடைப்பட்டிருந்தது. கீழே இறங்கி நடந்தான். ஒரே கூட்டம். நடுவில் ஒரு பெண்மணி தலைவிரி கோலமாய் நின்றபடி ஒரு வாகனமும் போகாத படி , கதறியபடி தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார். அருகில் இருந்த ஒருவரிடம் விசாரித்தான். அவர் சொன்னார், சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த அம்மாவின் இளவயது மகன் ஒரு விபத்தில் அடிபட்டு இறந்து போனான். சடலமும் பரிசோதனைக்காக கொண்டு போகப்பட்டுவிட்டது. இருந்தாலும் தரையில் சிதறிக்கிடக்கும் மகனின் ரத்தத்தில் எந்த வாகனமும் ஏறி அதை சிதைக்க அந்த தாயார் அனுமதிக்காமல் பல மணிநேரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார். வில்சன் இன்னும் நெருங்கி நடந்து அந்தப் பெண் சொல்வதை கவனித்தான், ” இது என் பிள்ளையின் ரத்தம். இதிலே நான் கொடுத்த தாய்ப்பால் இருக்குது. ஆசையாய் நான் ஊட்டிய சாப்பாடு இருக்குது. இதுமேல வண்டி ஏத்த விடவே மாட்டேன். திரும்பிப் போயிடுங்க எல்லாரும் “. வில்சனுக்கு அவனை அறியாமல் கண்ணீர் பெருகிற்று.

” கர்த்தாவே! நான் எத்தனை நீசன். அழியப்போகும் மனித ரத்தத்தைக்கூட இந்தத் தாயார் விட்டுக்கொடுக்காம தன் பிள்ளையாவே நினைக்கிறாங்க. ஆனால் நான் நிலத்து மேல வச்ச ஆசையால உலகத்தின் ரட்சிப்புக்காக சிந்துன உங்க ரத்தத்தை நினைவு கூரும் காரியத்தை அலட்சியப் படுத்திட்டேனே! எனக்கு நிலம் முக்கியமில்லப்பா. நீங்கதாம்ப்பா முக்கியம் ” கண்களைத் துடைத்தபடி காரில் ஏறி மீண்டும் ஊரை நோக்கித் திருப்பினான். கைப்பேசி ஒலித்தது. இடத்துக்காரர்.

“இன்னிக்கு வரவேணாம் சார். நம்ம ரிலேட்டிவ் பையன் ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டான். நீங்க புதன்கிழமை வந்து முடிச்சுக்குங்க. டேவிட்னு ஒருத்தர்கூட கால் பண்ணாரு. நான் சேல் பண்ணியாச்சுன்னே சொல்லிட்டேன்! ” வில்சனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.?

“நன்றி ஏசப்பா! ” என்றபடி இரண்டாவது ஆராதனையை நோக்கிக் கிளம்பினான்.

நண்பனே!
“அழிந்து போகிற உலகப் பொருளை வாஞ்சித்து , அழியாத பொருளை இழந்து போய் விடாதே.”

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென் ” . வெளிப்படுத்தின விசேஷம் 1 :6

(Visited 1 times, 1 visits today)

POPULAR POST

Popular posts:


NEWS

MORE