புதிய பள்ளி கல்வி ஆண்டு தொடங்கி இருக்கிற இந்த நாட்களில், இது வித்தியாசமான மனநிலையை உங்களுக்குள் கொண்டுவரக்கூடும். நீங்கள் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் இருக்கலாம் அல்லது வரவிருக்கும் பள்ளி ஆண்டு எங்கே கொண்டுபோகப் போகிறது என்பது குறித்து மனம் அழுத்தமாகவும் பதட்டமாகவும் இருக்கலாம். புதிய ஆண்டில் தவிர்க்க முடியாத பல தருணங்கள் ஏற்படலாம் அல்லது எதிர்பாராத வெற்றி தோல்வி ஏற்படலாம். ஆனால் நம் குழந்தைகளை பொறுத்தவரை, அவர்களை இயேசுவைப் பற்றியும், வேதத்தை பற்றியும் மேலும் அவர்களை ஆவிக்குரிய வாழ்கையில் நடத்துவதற்கு இந்த பள்ளி பருவத்தை விட முக்கியமான நேரம் வேறு ஏதுமில்லை. இதில் நமக்கு மிகவும் முக்கியமானது அவர்களை நம் ஜெபத்தால் தாங்குவது தான். நம் பிள்ளைகளின் இந்த பள்ளி பருவத்தில், அவர்களுக்காக ஜெபிக்க கீழே சங்கீத புஸ்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மூன்று ஜெபங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெபித்து ஜெயம்பெறுவோம். 1. குழந்தைகளுக்கு தேவ ஞானம் உண்டாக ஜெபிப்போம்: கிறிஸ்து இயேசுவே, என் குழந்தைக்கு உலக ஞானத்திற்கு மேலாக, உம்முடைய தெய்வீக ஞானத்தை கற்றுக் கொடுப்பீராக. உமக்கு பயப்படுகிற பயத்தையும், அந்த தெய்வீக பயம் அவர்களை எவ்வளவு மேன்மைக்கு கொண்டுசெல்லும் என்பதை அவர்களுக்கு காண்பிப்பீராக. உம்முடைய வார்த்தைக்கு கீழ்படிந்தவர்களாய் நடக்க அவர்களுக்கு உதவி செய்வீராக. என் குழந்தைகளை குறித்ததான உம்முடைய அனாதி தீர்மானத்திற்கு நேரான வழியில் அவர்களை நடத்துவீராக. அவர்களின் எல்லா சூழ்நிலையிலும் உம்மை உண்மையாக ஆராதிக்கவும், உம்மை உறுதியாய் பற்றிக்கொள்ளவும் ஞானத்தை கொடுப்பீராக. என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் பிள்ளைகளின் வாயின் வார்த்தைகளும், என் பிள்ளைகளின் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும். (சங்கீதம் 111:10) ஆமென். 2. குழந்தைகளுக்குள் தாழ்வுமனப்பான்மை உண்டாகாதபடி ஜெபிப்போம் : இயேசுவே, அடுத்தவர்களை பார்த்து தன்னுடன் எடைபோடுவது மிகுந்த சோர்வை கொண்டுவரும் என்பதை எங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். மேலும் அப்படிப்பட்டதான எண்ணம் உம்மிடமிருந்து வருவது இல்லை என்ற உண்மையை அவர்களுக்கு போதிப்பீராக. என் பிள்ளைகள் தேவனாகிய உம்முடைய பிள்ளைகள் என்பதையும், அதன் தனித்துவத்தையும் அவர்களுக்கு உணர்த்திக் காண்பிப்பீராக. எங்கள் குழந்தைகளை வேதத்தின் ஆழத்திலே வழிநடத்தவும், நல்ல கீழ்படிதலுள்ள பிள்ளைகளாய் வாழவும், மேலும் வாழ்கையில் எதில் குறைவு வந்தாலும் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேடவும் கற்றுக்கொடுக்கும் நல்ல மனிதர்களை அவர்களோடு சேர்ப்பீராக. ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது, ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். சங்கீதம் 84:10. 3. பிள்ளைகளுக்கு சிறந்த நண்பர்கள் வேண்டி ஜெபம்: இயேசுவே, என் குழந்தைகளின் வாழ்க்கையில் நண்பர்கள் தெரிவு செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆதலால் நல்ல உறுதியான நிலையான, உண்மையான நண்பர்களை கொடுப்பீராக. அந்த நண்பர்களால் என்றைக்கும் எங்கள் குடும்பத்தில் பிளவுகள் உண்டாகாதப்படிக்கு, அவர்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவராய் இருந்து சந்தோஷமாய் வாழக்கூடிய அளவிற்கு ஏற்ற நண்பர்களை தருவீராக. மற்ற பிள்ளைகளிடம் எந்த வித்தியாசமும் பாராமல், எல்லோரையும் சமமாகவும் அன்பாகவும் அவர்களை நேசிக்கவும் உதவியருளும். இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? (சங்கீதம் 133:1) ஜெபிக்க சங்கீத புஸ்தகம் ஒரு திறவுகோலாக செயல்படுகிறது. வேதத்தில் சங்கீத புஸ்தகத்தில் 150 சங்கீதங்கள் உள்ளன. அவைகள் பாடல்களாகவும், ஒரு நிஜ மனிதனின் வாழ்க்கையில் வரும் விசுவாச வெளிபாடுகளாகவும், எப்படி ஜெபிக்க வேண்டும், என்ன என்று ஜெபிக்க வேண்டும் மற்றும் எப்போதெல்லாம் ஜெபிக்க வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கின்றன. இன்னும் இந்த சங்கீத புஸ்தகதிலிருந்து ஞானத்தைத் தேடுதல், கடவுளுக்குப் பயப்படுதல், அமைதியாக இருத்தல், மனநிறைவுடன் வாழ்வது மற்றும் இன்னும் பலவற்றிற்கான திறவுகோல்களைக் கற்றுக்கொள்கிறோம். - Sis. Misbah Abraham