மெக்ஸிக்கோ நாட்டில் உள்ள தொலைகாட்சியில் ஒரு காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒரு சிறு பெண்பிள்ளை கையில் கட்டுகளோடு சிரித்த முகத்துடன் காட்சியளித்தது. அந்த நாளின் காலையில் அச்சிறுபிள்ளை அவள் வீட்டின் பின்புறம் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் தாயைவிட்டு ஓடிவந்திருந்த கரடி குட்டி உட்கார்ந்து கீழ் இறங்கமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள். அந்த குட்டிக்கு உதவி செய்யும்படி அதை கீழே இறக்கி விட்டாள். ஆனால் அந்த குட்டி அவள் இடது கையை கடித்துவிட்டது. மருத்துவமனைக்கு அவளை எடுத்துச் சென்றபோது மருத்துவர்கள், ஒருவேளை அந்த குட்டிக்கு சொறி சிரங்கு இருந்திருக்குமானால், அவளுக்கு ஆபத்து என கூறினர். அந்த கரடிக்கு சிரங்கு நோய் இருக்கிறதா என அதன் இரத்தத்தில் அறிய, அதைக் கொன்றால் தான் முடியும் என கூறினர். அதற்கு அந்த சிறுமி, அதை கொல்ல கூடாது என வாதித்தாள். " அதை கொல்லாவிட்டால், உனக்கு கடுமையான, வேதனையுள்ள சிகிச்சை செய்யவேண்டியிருக்கும்,'' என கூறினர், அதற்கு அவள் "குட்டியை கொன்று விடாதீர்கள். நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறேன்'' என்றாள். இங்கு மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு சிறுபிள்ளை தன்னைக் கடித்த கரடியைக் காப்பாற்றுவதற்காக வேதனையைத் தாங்கிக் கொள்ள ஆயத்தமாய் இருந்தாள். இந்த மேன்மையான மன்னிக்கும் குணத்தை எங்கிருந்து அறிந்தாள். நிச்சயமாக உலகத்திலிருந்து வந்திருக்க முடியாது. உலகம் "கல்லுக்கு கல், பல்லுக்குப் பல்'' என கூறும். எருசலேமுக்கு புறம்பே தேவ மனிதனை சிலுவையில் கொடூரமாக அறைந்து, தலையை துலக்கித் தூற்றினபோது, தன் மூச்சை இழுத்து "பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். இவர்களுக்கு மன்னியும்'' என்ற பெருமான் கிறிஸ்து இயேசுவில் இருந்து அதை அறிந்திருந்தாள். நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?