எங்கள் மகனை ஒரு நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நல்ல ஒரு கல்லூரியில் படிக்க வைத்தோம்; நல்ல ஒரு வேலையில் அவனை அமர்த்தினோம். ஆனால், அவனோ நல்லவனாக வாழவில்லை. இது ஒரு பெற்றோரின் அங்கலாய்ப்பான வார்த்தைகள். இக்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி ரீதியாக யாவற்றையும் சிறப்பாகச் செய்து அவர்களை நல்ல உத்தியோக நிலைக்கு கொண்டு வருகின்றனர். ஆனால், அவர்களின் ஒழுக்க ரீதியான வாழ்க்கை (Moral Life) சீர்கெட்டுப் போய்விடுகிறது. ஏனென்றால், பெற்றோர்கள் மூளைக்குத் தேவையானவைகளைச் செய்தார்களேயன்றி, இருதயத்திற்குத் தேவையான எதையும் செய்யவில்லை. மனிதனுடைய மூளை மட்டும் கூர்மையானால் போதாது. அவனுடைய இருதயம் ஒழுங்குப்படுத்தப் படவேண்டும். ஏனென்றால் இருதயம் எப்படியோ அப்படியே வாழ்க்கையும் இருக்கும். ஆகாத குணங்களுக்கும், சுபாவங்களுக்கும், தகாத பழக்கவழக்கங்களுக்கும் காரணமான கேடான சுபாவம் அகற்றப்படாவிட்டால் இருதயம் செம்மையடையாது. எனவே தான், வாலிப வயதில் இறைவனைத் தேடவேண்டிய தேவையை வேதம் வற்புறுத்துகின்றது. இஸ்ரவேல் நாட்டிற்கு ஒரு கால கட்டத்தில் ஒரு ராஜா தேவைப்பட்டபோது தேவன் நல்ல ஆற்றலும் திறமையும் உடைய எலியாபைத் தேர்வு செய்யவில்லை. அவர், ஆடு மேய்க்கிறவானாகிய தாவீதைத் தேர்வு செய்தார். ஏனென்றால், அவனிடம் நல்ல இருதயம் இருந்தது. அவன் நல்ல குணங்களும், பண்பு நலன்களும் உடைய ஒரு வாலிபன். அதனால் தேவன் எலியாபின் ஆற்றலுக்கு முக்கியத்துவம் தந்து அவனை அரியணையில் அமர்த்தாமல், தாவீதின் தாழ்மைக்கு முக்கியத்துவம் தந்து அவனை அரியணையிலேற்றினார். கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். I சாமுவேல் 16:7