ஒரு முதிய போதகர் புதியதாக ஒரு சபைக்கு மாறுதல் செய்யப்பட்டிருந்தார். பதவி ஏற்றவுடனேயே தன் சபையிலுள்ள விசுவாசக் குடும்பங்களை சந்தித்து. அவர்களுக்காக ஜெபிக்கச் சென்றார். ஒரு வீட்டில் நடுவயது மதிக்க தக்க தாயார் ஒருவர் தனியாக இருந்தார். கணவன் சந்தைக்குப் போயிருந்தார். போதகர் அந்த தாயாரிடம் "இயேசு இந்த வீட்டில் வசிக்கிறாரா" என்று கேட்டார். தாயார் போதகரிடம் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை என்று கூறினார். கணவன் வந்தவுடன் அந்த தாயார் மனபாரத்தோடு "புதிய போதகர் வீட்டுக்கு வந்திருந்தார் என்று கூறினார். கணவன் "அவர் என்ன சொன்னார்" என்று கேட்டார். என்னிடம் "இந்த வீட்டில் கிறிஸ்து வாசம் செய்கிறாரா என்று கேட்டார். பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லை" என்று மனைவி பதில் கூறினார். இந்த வார்த்தைகள் கணவனை அதிர்ச்சி அடையச் செய்தன. "நாங்கள் உண்மைக் கிறிஸ்தவர்கள், ஒழுங்காக வாரம் தவறாமல் ஆலயம் செல்கிறோம்" என்று ஏன் நீ சொல்லவில்லை என்று அவன் கேட்டதற்கு மனைவி, "போதகர் அதைக்குறித்து ஒன்றும் கேட்கவில்லை, இயேசு இவ்வீட்டில் வாசம் செய்கிறாரா என்று மட்டும்தான் கேட்டார்" என்றார்கள். கணவன் "நாங்கள் ஒழுங்காக தசமபாகம் காணிக்கைகளைத் தாராளமாகக் கொடுக்கிறவர்கள், வீட்டில் ஒழுங்காக தினமும் குடும்ப ஜெபம் செய்கிறோம் என்று கூறியிருக்கலாமே" என்றான். மனைவி அவரிடம் "அதைக்குறித்தும் போதகர் கேட்கவில்லை" என்றார்கள். பின் கணவனும் மனைவியுமாக நன்றாக யோசித்து, அழுது ஜெபம் செய்து இயேசுவைத் தங்கள் இல்லத்தில் வாசம்செய்யுமாறு வருந்திக் கேட்டனர், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை மாறினது. நாம் ஆலயம் செல்வது, தசமபாகம், காணிக்கைகள் கொடுப்பது, வீட்டில் ஜெபம் செய்வது எல்லாமே நல்லதுதான். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக, கிறிஸ்து நமது இல்லங்களில் தங்கி வாசம் செய்யும் குடும்பமாக நம் குடும்பங்கள் இருக்கவேண்டும். அதுவே தேவனுக்கு பிரியமான குடும்பமாகும்.