போதகர் ஒருவர் தன் சபையில் பிரசங்கம் செய்யப்போகும் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைக்கும்போது பாரம்பரிய சொற்களுக்கு அதிகம் செலவிடாமல் "இவர் ஒரு சிறந்த கிறிஸ்தவர்" என்று குறிப்பிட்டு, கிறிஸ்தவன் என்றாலே எப்போதும், ஏதாகிலும் பிறர்கென்று வைத்திருப்பான். இவர் ஒரு சிறந்த கிறிஸ்தவர் என்பதினால் நிச்சயமாக ஏதாவது சிறப்பானதை வைத்திருப்பார்; அப்படி உங்களுக்கென வைத்திருக்கும் சிறப்புச் செய்தியை உங்களுக்கு அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்," என்று தனது முகவுரையை முடித்தார். இந்த முகவுரையில் நமக்கு ஓர் செய்தி உண்டு. "ஓர் உண்மைக் கிறிஸ்தவனிடத்தில் ஏதாகிலும் பிறர்கென்று எப்போதுமே உண்டு" என்கிற வாக்கியம் நமது கிறிஸ்தவ ஜீவியத்தைப் புரட்டிப் பார்க்க செய்கிறதல்லவா? இயேசுவிடம் ஜனங்கள் ஏதாவது ஒன்றைப் பெறத்தான் வந்தார்கள். உணவு பெற்றார்கள், சுகம் பெற்றார்கள்,ஆறுதல் அடைந்தார்கள், நித்திய ஜீவன் பெற்றாகள். இன்னும் எத்தனையோ! என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன் என்று சீஷர்களும் கூட தங்களை நாடி வந்தவர்களுக்குக் கொடுத்தார்கள். நீங்களும் ஓர் உண்மை கிறிஸ்தவர் என்றால் எப்போதும் யார் வந்தாலும் கொடுப்பதற்கென்று ஏதாகிலும் உங்களிடம் உண்டா? பணம், பொருள் இல்லை வேறு எதை கொடுக்க முடியும் என்று எண்ணிப் பார்ப்போம். கிறிஸ்துவும், சீஷர்களும் ஒருபோதும் பொன்னையும் பொருளையும் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இயேசு நமக்களித்த அன்பை, அவர் நமக்கீந்த இரட்சிப்பை, நாம் பெற்ற ஆறுதல் வார்த்தைகளை யார் எப்போது வந்தாலும் கொடுக்கலாம் அல்லவா? இன்று ஒருவரிடமாகிலும் எதையாகிலும் பகிர்ந்துகொள்ளுங்கள். கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆறுதலடைய உதவி செய்யுங்கள்.