ஒருமுறை அரசன் ஒருவன் தன்னுடைய பட்டத்து யானையின் மேல் அமர்ந்துகொண்டு ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். திடீரென்று யானைக்கு மதம் பிடித்து அங்கும் இங்கும் ஓட ஆரம்பிக்கவே, அரசன் யானையிலிருந்து கீழேவிழுந்துவிட்டான். அவன் அருகில் இருந்த பொக்கிஷபெட்டியும் விழுந்துவிட்டது. பெட்டியில் இருந்த பொற்காசுகளும், ரத்தினக்கற்களும் சிதறி விழுந்துவிட்டன. அங்கு அருகில் நின்ற அனைவரும் பொற்காசுகளையும், ரத்தினக்கற்களையும் எடுக்க ஓடினார்களே தவிர அரசனை யாரும் காப்பாற்றவில்லை. அருகில் நின்ற ஒரு ஆப்பிரிக்க அடிமை உடனே ஓடி அரசனை காப்பாற்றினான். அரசன் அவனை நோக்கி, "நீ ஏன் மற்றவர்களைப்போல பொற்காசுகளை எடுக்காமல் என்னை காப்பாற்றினாய்" என்று கேட்டான். அதற்கு அந்த ஆப்பிரிக்க அடிமை, அரசே, பொன்னும், பொருளும், நிலையற்றது. அது என்னை காப்பாற்றாது. ஆனால் நீர் உயிரோடிருந்தால் என்னை காப்பாற்றுவீர், அனைத்தும் கிடைக்கும்" என்றான். அரசன் மிகவும் மகிழ்ந்து அவனது விசுவாசத்தைப் பாராட்டி, யாருக்குமே கொடுக்காத கவுரவத்தை அவனுக்குக் கொடுத்தான். நம்முடைய ராஜா நம்மை நோக்கி உலக சினேகம் வேண்டாம் என்று கூறுகிறார். அவருடைய ஆலோசனையைக் கேட்டு தேவ சிநேகம் கொண்டால் அரிய பொக்கிஷமாகிய பரலோகத்தை நாம் பெற்றுக் கொள்வோம். விசுவாசமே உங்கள் பொக்கிஷமாக இருப்பதாக. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசைகள் பல உண்டு. சிலர் ஆடை, ஆபரணங்களை அதிகமாக நேசிப்பார்கள். இன்னும் சிலர் பெரிய பதவிகளை வகிக்க வேண்டும். அதனால் பலருடைய பாராட்டுகளைப் பெறவேண்டும் என விரும்புவர்கள். உலகத்தை சிநேகிப்பது என்றால் என்ன? உலக பொருட்களின் மேல் ஆசைவைப்பதாகும். அவைகளை அடைய விரும்புவது நம்மை ஆண்டவரிடமிருந்து பிரித்து தூர அழைத்துச் சென்றுவிடும் என்பதாகும். "ஆகையால் உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக்கோபு 4:4