"உத்திரம் என்றால் என்ன?" "மரக்கட்டை" என்பதாகும். "மரக்கட்டை" போல மிகப்பெரிய தவறு உங்கள் பக்கம் இருக்கிறது என்ற உணர்வேயில்லாமல் உணர்வில்லாத இருதயத்தோடு மற்றவர்களின் 'துரும்பு' போன்ற சிறிய தவறையும் பெரிதுபடுத்திப் பார்ப்போரை என்ன சொல்வது ? பார்ப்பதோடு மட்டும் அல்ல: குற்றப்படுத்திப் பேசுவோரை என்ன சொல்வது? கிறிஸ்துவே இப்படிப்பட்ட உணர்வில்லாத இருதயமுடையோரை "மாயக்காரரே" என்கிறார். தவறு தங்கள் பக்கம் இருப்பதை உணராமல் மற்றவரை குற்றம் சாட்டுவது என்றால் அநேகருக்கு அல்வா சாப்பிடுவது போல பிரியாமாயிருக்கும். தன் முதுகு தனக்கு தெரியாது என்பார்களே! அதுபோல பிறரைக் குற்றப்படுத்தியே பழக்கமுடையோர் தங்கள் தவறை உணர்வதே கிடையாது. ஆள்காட்டி விரலைப் பிறருக்கு நேராக நீட்டி அவர்களை குறை சொல்லும் போது மற்ற மூன்று விரல்களும் நமக்கு நேராக நீட்டப்பட்டுள்ளது என்பதை மறந்து விடுகிறோம். இயேசுவை சற்று நோக்கிப் பார்ப்போம். அவர் ஒரு தடவை கூட தன் விரலை யார் மீதும் சுட்டிக் காட்டவேயில்லை. நமது பாவத்திற்க்கான குற்றத்தைக் கூட தன் மீதே ஏற்றுக் கொண்டார். "குற்றம் தன்னுடையதாய் இல்லாதிருந்தும்" அவைகளைத் தன் மீது ஏற்றுக் கொள்ளும் ஆவிதான் கல்வாரி சிலுவையின் ஆவியாகும். நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டுமே தவிர பிறரை சுட்டிக்காட்ட விரலை நீட்ட கூடாது. ஆதி தகப்பன் ஆதாம் செய்த தவறும் அதுதான். ஆதாமைப் போல விரலை நீட்டாமல் இச்சூழ்நிலைக்கான காரணம் என்னிடம் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து 'உம்மை போல மாற எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே' என்று ஜெபிப்பதே நல்லது. மற்றவர்களிடம் 99% தவறு இருந்தும் 1% மட்டுமே உங்கள் பக்கம் என்றாலும் மற்றவர்களை நியாயந்தீர்க்காமல் தன்னை மாத்திரம் ஆராய்வதே தேவனுக்கு உகந்தது.