இராபர்ட் மெக்காமிக் என்பவர் புதிய அறுவடை இயந்திரத்தைக் கண்டுபிடிக்கப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அதன்பின்பு தாம் கண்டுபிடித்த இயந்திரம் எல்லாவகையான நிலங்களிலும் அறுவடை செய்ய ஏற்றதாக இருக்கும்படி இருபது ஆண்டுகள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவரது முயற்சி ஏதாவது ஒரு விதத்தில் தோல்வியில் முடிந்தது. தனது தந்தையின் இந்த முயற்சிகளையெல்லாம் தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்த அவரது மகன் சைரஸ், தனது இருபத்திரெண்டாம் வயதில் தனது தந்தையின் முயற்சியைத் தானே தொடர்ந்து செய்யத் தீர்மானித்து மூன்று ஆண்டுகளில் எல்லா வகை நிலங்களிலும் நேர்த்தியாக அறுவடைச் செய்யக் கூடிய இயந்திரத்தை வெற்றியாக வடிமைத்து முடித்தார். அந்தத் தந்தையும் மகனும் தங்கள் முயற்சியில் தோல்வி கண்டவுடனேயே சோர்ந்துபோய் முயற்சியைக் கைவிட்டு இருப்பார்களானால் அவர்கள் சாதனை என்னும் உச்சியை எட்டி இருக்கவே முடியாது. அது போன்ற கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரே நாளில் உச்சியை எட்டிவிடும் வாழ்வல்ல. அது படிப்படியாக முன்னேறிச்செல்ல வேண்டியதொன்றாகும். நீதிமொழிகள் 24:16ல் நாம் வாசித்தபடி "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் என்பதையே நம் ஒவ்வொருவரிடமும் நம் தேவன் எதிர்பார்ப்பது. ஆடு ஒன்று தற்செயலாய் சேற்றில் விழ நேர்ந்தால் உடனே அது துள்ளிக் குறித்து வெளியேறி விடும். ஆனால் அதே சேற்றில் பன்றி ஒன்று விழ நேர்ந்தால் அது வெளியேறுவதற்கு அவசரம் காண்பிக்காது. அது போன்ற நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் உள்ள வித்தியாசமும் உள்ளது. நாம் யாவரும் நீதிமான்களாயிருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நமது கிறிஸ்தவ வாழ்வில் பாவத்திலோ அல்லது தேவன் விரும்பாத ஏதோ ஒன்றிலோ விழ நேர்ந்தால் தொடர்ந்து அந்நிலையிலேயே இருந்து விடாதபடி அந்நிலையிலிருந்து நாம் வெளியேறி தொடர்ந்து வெற்றிவாகையை நோக்கி முன்னேற முழுமூச்சுடன் போராட வேண்டும்.