அமெரிக்காவில் அடிமை வாணிபம் நடந்து வந்த நாட்களில் ஒரு எஜமான் தன் அடிமைகளிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். அடிமைகளும் அவரிடம் மிகவும் பாசமாகப் பழகி அவருடைய தோட்டங்களில் மிகவும் உண்மையாக உழைத்தனர். அவர்களில் ஜோ என்ற ஒரு அடிமை எஜமானுடைய நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரவானாக விளங்கினான். தன் தோட்ட வேலைகளில் எந்த ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமென்றாலும் அவனிடம் அலோசனை செய்தபிறகே எடுப்பார். இப்படியிருக்க ஒருநாள் எஜமான் ஜோவையும் அழைத்துக் கொண்டு அடிமைச்சந்தைக்குச் சென்றார். ஒரு சில அடிமைகளை விலைக்கு வாங்கினார். அங்கே ஒரு வயோதிப அடிமை விலைக்காக வைக்கப்பட்டிருந்தான். அவன் கிழவனானபடியால் யாரும் வாங்க முன் வரவில்லை. ஆனால் ஜோ அங்கு வந்த நேரம் முதலே தன் எஜமானிடம் எப்படியாவது அந்த கிழவனை விலைக்கு வாங்கும்படி வற்புறுத்தினான். கடைசியாக ஒருசிறு தொகை கொடுத்து அவனை விலைக்கு வாங்கினார்கள். அந்த நாள் முதலே ஜோ அவனுக்கு பலவிதமான உதவிகள் செய்து ஒரு முறை அவனுக்கு சுகவீனம் ஏற்பட்டபோது ஜோ அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று கவனித்தான். எஜமான் அவனிடம் அந்த கிழவன் உன் தகப்பன் தானே, நீ ஏன் என்னிடம் மறைத்தாய் என்றார். ஜோ அவரிடம் ""எஜமானனே, அவன் என் தகப்பன் அல்ல, என்னுடைய பரம எதிரி. நான் சிறுவனாக இருந்த போது என்னைத் திருடிச் சென்று அடிமைச் சந்தையில் விற்றவன் இவனே. ஆயினும் நான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருப்பதால் அவனுக்கு உதவி செய்கிறேன்'' என்றான். நண்பர்களே உங்கள் அயலகத்தார் அல்லது உடன் ஊழியக்காரர்கள் பெரிய தீமை இழைத்திருக்கலாம், ஆயினும் அவர்கள் தேவையிலிருக்கும்போது ஓடிச்சென்று உதவி செய்வதே கிறிஸ்துவின் குணமாகும்.