(சேலா.) என்றால் என்ன| Tamil Christian Message

இந்த வார்த்தை வேதத்தில் சங்கீத புத்தகத்தில் 71 முறையும், ஆபகூக் என்ற புத்தகத்தில் 3 முறையும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 'சேலா' என்ற வார்த்தை சங்கீத பாடல்களுக்கு கவிதை நயத்திற்காக சேர்க்கப்பட்ட சொல் என்று கருதினாலும் அதனுடைய அர்த்தத்தை பார்க்கும்போது "தரித்து நின்று கவனி' என்ற ஆழமான கருத்தை தெரிவிக்கின்றது. சங்கீதக்காரனாகிய தாவீது தன் வாழ்வில் பல நேரங்களில் நெருக்கங்கள் பின்னடைவுகள் மற்றும் தோல்விகளையும் சந்திப்பதைப் பார்க்கிறோம். ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் அவன் நிதானித்து, தரித்து நின்று, சூழ்நிலையை கவனித்து செயல்படுவதை பார்க்கிறோம். "சேலா' சற்று தரித்திருந்து பின்பு தேவனிடம் சூழ்நிலையை ஒப்புக்கொடுத்து செயல்படுகிறான். அப்பொழுது தேவன் அவனுடைய எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் அவனை விடுவித்து வெற்றியைத் தருவதைப் பார்க்கிறோம். ஆவிக்குரிய வாழ்விலும் தாவீது தான் பாவத்தில் சிக்கியபோது, தன்னை நிதானித்து கர்த்தரை நோக்கிப் பார்த்து இக்கட்டிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்கிறான்.... (சேலா.) இந்த நாட்களிலும் விவசாயிகளுக்கு பருவ மழை பெய்யாததாலும், தேவையற்ற காலங்களில் மழை பெய்வதாலும் பயிர் சேதமுற்று, விளைச்சலில் தோல்வியை கண்டு மனம் உடைந்து போவதைப் பார்க்கிறோம். எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறாதாலும், தேர்வுகளில் தோல்விகளை சந்தித்தும் மாணவர்கள் சோர்ந்து போவதைக் காண்கிறோம். தான் நேசித்தவர்கள் துரோகம் செய்ததால், பல இளைஞர்கள் வாழ்க்கையையே முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிந்திக்கவேண்டும், நிதாதனம் தேவை... (சேலா.) அரசாங்கம் வறட்சிக்கு நிவாரணம் கொடுக்க முடியும். ஆனால் மழையைக் கொடுக்க முடியாது. பல்கலைக்கழகங்களால் இலவச மதிப்பெண்கள் (Grace Mark) கொடுக்க முடியும், ஆனால் அறிவைக் (ஞானத்தை) கொடுக்க முடியாது. உலகத்தார் நமக்காகப் பரிதபிக்க முடியும். ஆனால் உண்மையான அன்பைக் கொடுக்க முடியாது. தோல்விகள், இழப்புகள், நஷ்டங்கள் இவற்றிற்கு நாம் எடுக்கவேண்டிய முடிவு மரணம் அல்ல. தற்கொலையும் அல்ல. சற்று நிதானித்து செயல்பட வேண்டும். காற்றையும், மழையையும் உருவாக்கும் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும். ஞானத்தில் குறைவுள்ளவனுக்கு ஞானத்தைத் தருவேன் என்று வாக்களித்த கிறிஸ்துவை சார்ந்துகொள்ளுவோம். நமக்காக ஜீவனையே தந்து நம்மேல் அன்புகூர்ந்த இயேசுவைப் பற்றிக்கொள்ளுவோம். ஆபத்துகாலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய். சங்கீதம் 50:15 எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவை சார்ந்துக் கொள்ளுவோம். மேற்கூறிய வாக்குத்தத்தத்தை பற்றிக் கொள்ளுவோம். உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்.

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create