மௌனமாய் இருப்பதில் அசீர்வாதங்கள் உண்டு.தெய்வீகத்தின் மகா மகிமையின் பிரசன்னத்தில் அமர்ந்து,மௌனமாய் அவரது வல்லமையையும், மகிமையையும் தியானிக்க வேண்டிய அவசியமும் உண்டு. துன்பத்தில் அலைமோதின ஒருவர், போதகரிடம் வந்து, பல கேள்விகளைக் கேட்டு, துளைத்துக்கொண்டே இருந்தார். போதகர் சொன்னார், "சகோதரனே, உன் பிரச்சனைகளை தேவ சமுகத்தில் மௌனமாய் வைத்து விட்டு, கர்த்தருடைய பதிலுக்காக காத்திரு." அதற்கு அவன் கேட்டான், "இயேசு என்னோடு நேரில் பேசி பதில் கொடுப்பாரா?" போதகர் பதில் சொன்னார். "சகோதரனே, ஒரு வேளை நேரடியான பதில் உனக்குக் கிடைக்காவிட்டாலும், நீண்ட நேரம் தேவனுடைய பாதத்தில் மௌனமாய் அமர்ந்திருந்தால் அந்த மௌனமே உன் கேள்விகளுக்கு பதிலாகி, உனக்கு ஆறுதலளிக்கும்; அவரது தேவ சமாதானம் உன் உள்ளத்தை நிரப்பி, உன்னைக் காத்துக்கொள்ளும்" என்றார். தாவீது தன் அனுபவத்தை எழுதுகிறார், "நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன். நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்... என் இருதயம் எனக்குள்ளே அனல் கொண்டது. நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது" (சங்கீதம் 39:2,3). தேவபிள்ளைகளே, உங்களைச் சுற்றிலும், கேலியும் ,பரியாசமும், நிந்தையும், நிறையும் போது, பிலாத்துவின் முன் மௌனமாய் நின்ற கிறிஸ்துவை நினைத்துக் கொள்ளுங்கள். "கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்" (சகரியா 2:13).